''இளையவராக இருந்தாலும் ஆண் அமைச்சருக்கே முன்னுரிமை.. சமூகம் மாறணும்'' - பொங்கிய அமைச்சர் கீதா ஜீவன்
கருத்தரங்கில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பாலின சமத்துவம் குறித்தும் பெண்களின் தற்போது நிலை குறித்தும் , தன்னுடைய நிலைமை குறித்தும் பேசினார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரமளித்தல் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பாலின சமத்துவம் குறித்தும் பெண்களின் தற்போது நிலை குறித்தும் பேசினார். குறிப்பாக திமுக அரசின் தற்போதைய நலத்திட்டங்கள் குறித்து பேசிய அமைச்சர், தன்னுடைய நிலைமை குறித்தும் பேசினார். மேடையில் பேசிய அமைச்சர், ''பாலின சமத்துவத்துக்காவும், இரு பாலருக்கும் சம உரிமை வழங்க வேண்டுமென்றும் பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய முதல்வர் எடுத்துவருகிறார்.
View this post on Instagram
அதேபோல பெண் தொழில்முனைவோரை உருவாக்க பயிற்சிகள் வழங்கபடுகின்றன.குறிப்பாக கடந்த பட்ஜெட்டில் பாலின வரவு செலவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் எல்லா துறைகளிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு குறித்து உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோல அரசியலில் பெண்கள் பங்கேற்கவும், தலைமை பண்போடு முன்னேறவும் திராவிட மாடல் உண்மையில் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பெண்களுக்கு எதிரான முழுமையான உரிமைகளை பெற்றுவிட்டோம், குற்றங்களை எல்லாம் குறைத்துவிட்டோம் என சொல்லமுடியாது. தமிழ்நாட்டில் இவ்வளவு முன்னேற்றம் இருந்தாலும் அகில இந்திய அளவில் பெண்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
1996ல் என்னுடைய தந்தையார் பெண்கள் இட ஒதுக்கீடு வரும்போது என்னை களத்தில் இறக்கினார்.அந்த எண்ணம் முதலில் வரவேண்டும். அதேபோலத்தான் வாக்களித்தவர்களும். அப்போது இட ஒதுக்கீடும் இருந்தது. நானும் வெளியே வந்தேன்.அந்த சமூக மாற்றம் என்பது ஒவ்வொருவரின் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் இருந்து தொடங்க வேண்டும். ஆண் பெண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும். பெண்களை மதிக்க ஆண்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
View this post on Instagram
என்னுடைய பார்வையில், இயல்பாகவே இருக்கிறது. யாருமே பெண்ணை ஒதுக்கவேண்டுமென்று நினைக்கவில்லை. ஒரு இடத்துக்கு நான் போகிறேன் என்றால் கீதா ஜீவனுக்கு மரியாதை செலுத்தக்கூடாது என யாரும் நினைக்கவில்லை. ஆனால் இயல்பாகவே 4 அமைச்சர்கள் சென்றால் என்னைவிட இளையவராகவே இருந்தாலும் 'சார் வாங்க' என்று அவர்களை முன்னெடுத்து விடுகிறார்கள். அதற்கு காரணம் அதுதான். சமூக உணர்வு, சமூக கருத்தியல். ஆகவே அந்த சமூக மாற்றம் ஏற்பட வேண்டும். அது நம் வீடுகளில் இருந்து உருவாக வேண்டும்'' என்றார்.