Senthil Balaji: கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 19 பேர் பிணை ரத்து - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
கரூரில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது, அவரது ஆதரவாளர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கினர்.
கரூரில் கடந்த மே மாதம் 26ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது, அவரது ஆதரவாளர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கினர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இது குறித்த வழக்கினை முதலில் விசாரித்த கீழமை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 19 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்ததுடன், மூன்று நாட்களில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மே மாதம் 26ஆம் தேதி காலை முதல் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கரூர், கோவை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட ஊர்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, “எனது சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. எனது தம்பி மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது” என அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போது தெரிவித்திருந்தார்.
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உட்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த லேப்டாப், ஆவணங்களை அதிகாரிகள் எடுக்க வந்தபோது அவர்களை திமுகவினர் சுற்றி வளைத்தனர். குறிப்பாக பெண் அதிகாரி ஒருவரிடம் ஐ.டி.கார்டை காட்டச் சொல்லி தொண்டர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.
மேலும் அதிகாரிகள் வந்த காரும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் சோதனை நடத்த முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றனர். அதேசமயம் அதிகாரிகள் தங்களை தாக்கியதாகவும் திமுகவினர் குற்றம் சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் சோதனை நடத்த வருமானவரித்துறை திட்டமிட்ட நிலையில், இதில் 7 இடங்களில் தொண்டர்கள் இடையூறால் சோதனை நடத்த முடியவில்லை என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையால் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடக்கவிருந்த மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் திமுகவினர் மீது புகார் அளித்ததையடுத்து 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. அதையடுத்து வருமானவரித்துறை சார்பில் மேல்முறை செய்யப்பட்டது. அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 19 பேரின் ஜாமீனை ரத்து செய்து 3 நாட்களுக்குள் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டதுடன்; இந்த வழக்கை கரூர் குற்றவியல் நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்கவும் அறிவுருத்தியுள்ளது.