Seeman Case: அடுத்தடுத்த சிக்கல்.. அவதூறாக பேசியதாக வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான சீமான்..
அருந்ததியர் சமூகம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அருந்ததியர் சமூகம் குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக, கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார். இதில், பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகம் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது விஜயநகரப் பேரரசு ஆட்சியில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என பேசியிருந்தார். அதாவது ஆந்திராவில் இருந்து வந்து குடியேறியவர்கள் அருந்ததியர்கள் என சீமான் பேசியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டியலின அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், ஐபிசி 153B(1)(c) 505(1)(c), 506(1) உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது. இதன்படி இன்று ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகி உள்ளார்.
அப்போது சீமான் தரப்பில் ஜாமீன் கோரி இரண்டு நபர்கள் உத்தரவாதத்துடன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் வழக்கு விசாரணை பிறபகல் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து சீமான் தங்கும் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் மதியம் வழக்கு விசாரணையில் வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் சீமானுக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.