Sedapatti Muthiah: முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..
தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் முக்கிய தலைவராக வலம் வந்தவரும், தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகருமானவர் சேடப்பட்டி முத்தையா. அவருக்கு வயது 77. கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சேடப்பட்டி முத்தையா 1945ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி பிறந்தவர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியது முதல் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தவர். இவர் பின்னர், சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து சேடப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினரானார். ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்ற போது, சபாநாயகராக பொறுப்பு வகித்தார்.
ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றபோதே, அ.தி.மு.க.வின் மூத்த தலைவராக விளங்கியவர். 1977ம் ஆண்டு, 1980ம் ஆண்டு, 1984ம் ஆண்டு மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலி்ல வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்துள்ளார். சேடப்பட்டி சட்டமன்ற தொகுதி இவரது கோட்டையாக விளங்கியதால் இவரை இவரது ஆதரவாளர்கள் சேடப்பட்டியார் என்றும் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலும் படிக்க : Diwali Reservation : அடுத்த மாதம் தீபாவளி.. ஊருக்கு போகணுமா? இன்றுமுதல் அரசு பேருந்துகளில் செல்ல முன்பதிவு தொடக்கம்!
சட்டமன்ற உறுப்பினராக மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினராகவும் சேடப்பட்டி முத்தையா பொறுப்பு வகித்துள்ளார். அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படும் பெரியகுளம் தொகுதியில் இருந்து 2 முறை மக்களவைக்கு தேர்வாகியுள்ளார். 1999ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
பின்னர், உடல்நலக்குறைவில்லாமல் இருந்த தருணத்தில் கட்சித் தலைமை தக்க உதவி அளிக்கவில்லை என்று அ.தி.மு.க.வில் இருந்து விலகி 2006ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்தார். அ.தி.மு.க.வின் பலம்வாய்ந்த தலைவராக விளங்கிய சேடப்பட்டி முத்தையா தி.மு.க.வில் இணைந்தது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரிழந்த சேடப்பட்டி முத்தையாவிற்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன் உள்ளனர். அவரது சொந்த ஊரான மதுரை, சேடப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. அவரது இறுதிச்சடங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : குறுக்கு வழியில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக வரும் தகவலை நம்பி ஏமாறவேண்டாம்- ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
மேலும் படிக்க : செயலிழந்த இரு கால்கள்...... தன்னம்பிக்கையை இழக்காமல் சொந்தக் காலில் நிற்க துடிக்கும் மாற்றுத்திறனாளி பெண்