Digi Locker: டிஜி லாக்கரில் ஆவணங்களை சேமியுங்கள் - அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு!
Digi Locker: கணினிமயமாக்கலுக்கும், இணையவழி நடவடிக்கைக்கும் திமுக அரசு முக்கியத்தும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சேமித்து வைக்கும் மத்திய அரசின் DigiLocker செயலியை பயன்படுத்த அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க பெரிதும் பாடுபட்டு வருகிறார். இணைய வசதி, திறன் வளர்ச்சி, டிஜிட்டல் நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்கக் கூடிய திட்டமாக டிஜிட்டல் இந்தியா முன்வைக்கப்பட்டது. மேட்டுக்குடியினருக்கு மட்டும் அல்லாமல், ஏழைகளுக்குமான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதே நோக்கம் என பிரதமர் மோடி இத்திட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார். இன்றைய காலகட்டத்தில், ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் பல்வேறு காரணங்களுக்காக தேவைப்படுகின்றன. இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் எந்த வேலையையும் எளிதில் முடித்து விட முடியாது. இந்த ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதும் நம் அனைவருக்கும் மிகவும் அவசியமானதாகும்.
இந்த சூழ்நிலையில்தான் டிஜி லாக்கர் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஜி லாக்கர் என்பது ஒரு மெய் நிகர் செயலி ஆகும். இது பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் சேமித்து வைக்கப்படும் ஆவணங்கள் எங்கும், யாரிடமும் காண்பித்து அதற்கான பலனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
டிஜி லாக்கரில் வைத்தால், உங்கள் பான் மற்றும் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்கள், தொலைந்து விடுமே என்ற கவலையே தேவையில்லை. அரசின் டிஜி லாக்கரில், பத்திரமாக சேமித்து வைக்கலாம். இதனை தேவைப்படும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்.
இந்நிலையில்தான் டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சேமித்து வைக்கும் மத்திய அரசின் DigiLocker செயலியை பயன்படுத்த அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையும் காகித மில்லா அறிக்கையாகவே தாக்கல் செய்யப்பட்டது. அதன் மூலம் கணினிமயமாக்கலுக்கும், இணையவழி நடவடிக்கைக்கும் திமுக அரசு முக்கியத்தும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பை சிலர், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு இணக்கமாக செல்வதாக விமர்சித்தும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்