Governor Ravi: ”சனாதனம் தான் எல்லாமே, யாராலும் அழிக்க முடியாது, முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” - ஆளுநர் ரவி சவால்
சனாதனத்தை அழிக்க பார்ப்பது நாட்டையே பிளவுபடுத்துவதற்குச் சமன் என, ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
சனாதனம் என்பது மரத்தின் வேர் போன்றது என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
பாரதம் உருவானதே சனாதனத்தில் தான்:
சென்னை அண்ணா நகரில் உள்ள ஸ்ரீபாலிமர் மண்டபத்தில் நடைபெற்ற உடுப்பி தீர்த்த சுவாமி, சனாதன உற்சவ வழிபாடு நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “ பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில் தான். சனாதனத்தில் எல்லாமே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்பது பாரத். பாரத் என்பது சனாதன தர்மத்தின் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள், சனாதனத்திற்கு கேடு விளைவிக்க நினைப்பவர்கள், நாட்டையே பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் அப்படி பேசுகிறார்கள். ஆனால், நாட்டின் அடிப்படை சக்தி என்பதே சனாதனம் தான். எனவே நீங்கள் இந்த நாட்டை உடைக்க விரும்பினால், சனாதனத்தை தாக்குங்கள். அதைத்தான் ஆங்கிலேயர்கள் செய்தார்கள். முயற்சித்தார்கள். அப்படித்தான் அவர்கள் பாரதத்தை உடைப்பதில் வெற்றி பெற்றார்கள்.
தமிழகத்தில் வளமோடு இருந்த சனாதனம் - ரவி:
இன்னொரு பிரிவினையை பாரதத்தால் தாங்க முடியாது. சனாதன ஒளியைப் பரப்பும் நமது பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும். சனாதனம் உலகிற்கு தேவையான ஒன்று. சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது. சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. சனாதனம் என்பது மரத்தின் வேர் போன்றது, வேர் இல்லாமல் மரம் வளர முடியாது. தமிழகத்தில் சனாதனம் வளமோடு இருந்தது. சனாதனம் செழித்த புண்ணிய ஸ்தலமாக தமிழ்நாடு இருந்ததற்கான சான்று உள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறுபவர்கள், முடிந்தால் முதலில் இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் அழித்துப் பாருங்கள். சனாதனம் மக்களின் டிஎன்ஏவிலும், அவர்களது வாழ்வியலிலும் உள்ளது.
சனாதனத்தை அழிக்க முடியாது:
சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர். ஆனால் யாராலும் அதை அழிக்க முடியவில்லை. தற்போது சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் தங்களது அரசியல் லாபத்திற்கான கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்கள் சனாதனத்தின் விழுமியங்களைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் சனாதனம் அழியாதது” என ஆளுநர் ரவி பேசியுள்ளார்.
சனாதன சர்ச்சை:
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ள சனாதனத்த ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜகவினர் பெரும் எதிர்வினையாற்றினார். உதயநிதிக்கு கொலை மிரட்டல்கள் விதிக்கப்பட்டதோடு, அவருக்கு எதிராக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் தான், உதயநிதியின்பெயரையே குறிப்பிடாமல் அவரது சனாதனம் தொடர்பான கருத்துக்கு, ஆளுநர் ரவி பதிலடி தந்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுர் ரவிக்கும் பல்வேறு விவகாரங்களில் முட்டல் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், சனாதனம் விவகாரத்திலும் அமைச்சர் உதயநிதிக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் ரவி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.