Sanatan Row: சனாதன விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் மகனை தொடர்ந்து கார்கே மகனுக்கும் செக்! உ.பியில் பரபரப்பு
சனாதனத்திற்கு எதிராக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சனாதனத்திற்கு எதிராக பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உதயநிதி, பிரியங்க் மீது வழக்கு:
சனாதன தர்மம் குறித்து உதயநிதியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, மத உணர்வுகளை சீர்குலைத்ததாக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை ஒழிக்க அழைப்பு விடுத்ததற்காக உதயநிதி மீதும், அவரது கருத்தை ஆதரித்ததற்காக பிரியங்க் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னிலைப்படுத்தி, உதயநிதியின் கருத்துகள் தங்கள் உணர்வுகளை புண்படுத்தியதாக ஹர்ஷ் குப்தா மற்றும் ராம் சிங் லோதி ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 295 ஏ (மத உணர்வுகளை உள்நோக்கத்துடன் சீண்டும் மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 153 ஏ (வெவ்வேறு மதக் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி பேசியது என்ன?
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ”நாம் அழிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன, அவற்றை வெறுமனே எதிர்க்க முடியாது. கொசுக்கள், டெங்கு, காய்ச்சல், மலேரியா, கொரோனா இவையெல்லாம் நம்மால் எதிர்க்க முடியாதவை, இவற்றை ஒழிக்க வேண்டும். சனாதனமும் இது போன்றது தான. அது சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக உள்ளது. எனவே சனாதனத்தை எதிர்ப்பதை காட்டிலும், ஒழிப்பதே அவசியம்” என பேசினார்.
எதிர்ப்பும், ஆதரவும்:
உதயநிதியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்வினையாற்றினர். இனப்படுகொலைக்கு அவர் அழைப்பு விடுப்பதாகவும் குற்றம்சாட்டினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். அதேநேரம் உதயநிதியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் ஆதரவு தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர் “சமத்துவத்தையும், சமூக நீதியையும் வழங்காத எந்தவொரு மதமும் நோயை போன்றது தான்” என பிரியங்க் தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்களால் எரிச்சலடைந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் இந்திய அணியும் காங்கிரஸும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர். அதே நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவுக்கும் திமுக அமைச்சரின் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியது. இந்நிலையில் தான், உதயநிதி மற்றும் பிரியங்க் கார்கே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.