(Source: ECI/ABP News/ABP Majha)
Bharat Row: ”இந்தியா பெயரை மாற்றுவது எல்லாம் வதந்தியே” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஓபன்டாக்
இந்தியா என்ற நாட்டின் பெயரை மாற்றுவதாக வெளியாக செய்திகள் வதந்தி மட்டுமே என, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்தியா என்ற நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பான விவகாரத்தில், எதிர்க்கட்சிகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்திகள் எல்லாம் வதந்தியே..!
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது “இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே. ஆனால், இந்த செய்திகள் பாரத்' என்ற பெயரைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது. அரசின் அழைப்பிதழ்களில் பாரதம் என குறிப்பிடப்படுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இதற்கு முன்பும் பாரத அரசு என்ற பெயரில் பல அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
நான் பாரத அரசின் அமைச்சர். பல செய்தி நிறுவனங்களின் பெயரில் பாரத் என்று உள்ளது. பாரதம் என்ற பெயரையே விரும்பாத இவர்கள் யார்? இவர்கள் ஏன் பாரதத்தை எதிர்க்க வேண்டும்? பாரதம் என்ற பெயரை எதிர்ப்பது யார்? இப்போதெல்லாம் பாரதம் என்று குறிப்பிட்டால் கூட வலியை உணர ஆரம்பித்து விட்டீர்களா? தேசத்தின் முன் கட்சியை வைத்து அரசியல் என்ற புதைமணலில் சிக்கியவர்கள் இவர்கள்தான் பாரதத்தை எதிர்க்கிறார்கள். வெளிநாட்டு மண்ணில் இருந்து நாட்டைக் கேவலப்படுத்த முயற்சித்ததும் இவர்கள் தான்.
10 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், எதிர்க்கட்சிகள்தான் தங்கள் கூட்டணியை UPA என்று அழைப்பதை நிறுத்திவிட்டன. ஆனால் அவர்கள் மறந்துவிடுகிறார்கள், அவர்கள் UPA என்ற பெயரை துறந்தாலும், முகங்கள், குணம் மற்றும் நடத்தை ஒரே மாதிரியாக இருக்கும். பெயரை மாற்றுவதால் உங்கள் செயல்கள் மாறாது. இந்த ஊழல் கூட்டணி, ஆணவம் நிறைந்த கூட்டணியை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது” என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
”பாரதம்” சர்ச்சை:
நாட்டில் இதுநாள் வரையில் இந்திய குடியரசு தலைவர் மற்றும் இந்திய பிரதமர் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுக்கு இரவு விருந்திற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில், குடியரசு தலைவர் மாளிகை இந்தியாவை தவிர்த்து பாரதம் என குறிப்பிட்டுள்ளது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் தொடர்பான அறிவிப்பிலும் இந்தியா என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால், செப்டம்பர் 18ம் தேதி கூடும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என பல்வேறு தகவல்கள் வெளியாகின.
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
இதையடுத்து மத்திய அரசுக்கு காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தியா ஒன்றும் பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல என சாடின. மேலும், I.N.D.I.A கூட்டணி தனது பெயரை பாரத் என மாற்றினால், நாட்டின் பெயரை பாஜக என மாற்றிவிடுவீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு கிடைத்துள்ள ஆதரவை பொறுக்க முடியாமலேயே, நாட்டின் பெயரை மாற்ற பிரதமர் மோடி முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர். இந்நிலையில், நாட்டின் பெயரை மாற்றுவதாக வெளியாக தகவல்கள் வெறும் வதந்தியே என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.