நாமக்கலில் கொட்டித் தீர்த்த கனமழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து நிறுத்தம்..!
’’சாலைகளில் இருபுறமும் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நிறுத்தம்’’
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விடிய விடிய பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல நாமக்கல் மாவட்டத்திலும் பரவலாக கனமழை பெய்தது.
இந்நிலையில் ஈரோடு-நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே உள்ள பள்ளிபாளையம் பகுதியில் நேற்றிரவு கன மழை பெய்தது. இதேபோல குமாரபாளையம் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விடிய விடிய தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிபாளையம் நான்கு வழிச் சாலை சந்திப்பு அருகே செல்லும் பிரதான கால்வாயில் அளவு அதிகமாக சென்ற மழை நீர் காரணமாக, ஈரோடு செல்லும் சாலைகளில் உள்ள வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறுகளில் செல்வதைப் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும், சாலைகளில் இருபுறமும் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு செல்லும் பேருந்துகள் செல்ல முடியாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர். மேலும் கனமழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் நகர பகுதியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் மக்காச்சோளம் உள்ளிட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் பள்ளிபாளையம் பகுதியில் பெய்த மழை காரணமாக நான்கு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிபாளையம் நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியில் செல்லும் பெரிய கால்வாயை சுத்தம் செய்யும் வகையில் நகராட்சி அதிகாரிகள் உரிய வகையில் தூர்வாரவில்லை எனவும், இதன் காரணமாக கனமழையினால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாகி உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் உடனடியாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாக்கடைகளை தூர்வார நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.