Remdesivir medicine distribution: கோவையில் ரெம்டெசிவிர் வாங்க குவிந்த பொதுமக்கள்; தாமதமானதால் சாலை மறியல்
கோவையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகள் சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் அம்மருந்து விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 8 ம் தேதி முதல் கோவையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வயால் ரெம்டெசிவிர் ஆயிரத்து 568 ரூபாய்க்கும், 6 வயால் ரெம்டெசிவிர் 9 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளி மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. ரெம்டெசிவிர் விற்பனை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் ஆவணங்களை பார்த்து பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே அம்மருந்து வழங்கப்படுகிறது. ரெம்டெசிவிர் விற்பனை துவங்கிய முதல் நாளில் 500 வயால் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நாளான நேற்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் மருந்து வாங்க வந்த 63 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்களுக்கு இன்று மருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை பத்து மணி முதல் மாலை 5 மணி வரை ரெம்டேசிவிர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் இன்று அதிகாலை 6 மணிக்கே டோக்கன் பெற்றவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மருந்து வாங்க அரசு மருத்துவக் கல்லூரி முன்பு குவிந்தனர். நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் மருந்து வாங்குவதற்காக 500 க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை பத்து மணிக்கு மருந்து விநியோகம் துவங்கியது. இதனிடையே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பகுதி பகுதியாக மக்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதித்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும் கல்லூரிக்குள் அனுமதிக்காததால் கல்லூரிக்கு முன்பாக காத்திருந்த பொதுமக்கள் கோவை அவிநாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல் துறையினர் சமரசப்படுத்தி கலைந்து செல்ல செய்தனர். தொடர்ந்து ரெம்டெசிவிர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ரெம்டெசிவிர் வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “கோவையில் நாள் ஒன்றுக்கு ரெம்டெசிவிர் 500 வயால் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அம்மருந்தை வாங்க மக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர். இதனை தவிர்க்க கூடுதல் மருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.