Rava Laddu : வழக்கமான ஸ்டைல் போரடிக்குதா? ரவா லட்டு மினுமினுன்னு ஈஸியா செய்யலாம்.. இதோ ரெசிபி..
எளிமையான முறையில் சுவையான ரவா லட்டு எப்படி செய்வது என்றுதான் பார்க்கப்போறோம்.
தேவையானவை..
நெய் – 6 ஸ்பூன், நறுக்கிய பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பூசணி விதை, பிஸ்தா பருப்பு ஒரு கப், உலர் திராட்சை 20, தேங்காய் துருவல் – அரை கப், ரவை – 2 கப், சர்க்கரை -ஒன்றரை கப், ஏலக்காய் – 10, பால் – அரை கப்.
முதலில் ரவா லட்டு செய்வதற்கு ரெண்டு கப் அளவிற்கு ரவையை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தேவையான நட்ஸ் வகைகளையும் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒன்று இரண்டாக சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் நான்ஸ்டிக் பேன் வைத்து, அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் நெய் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். முந்திரி, பாதாம், பிஸ்தா, பூசணி விதை என்று உங்களிடம் உள்ள பருப்பு வகைகளை தேவைக்கேற்ப நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
அதில் எல்லா நட்ஸ் வகைகளும் சிவக்க சிவக்க வறுபட்டதும், உலர் திராட்சைகளை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நட்ஸ்களை நெய்யை கடாயிலேயே வடிகட்டிவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது அதே வாணலியில் இருக்கும் நெய்யில், தேங்காய் துருவல் அரை கப் அளவிற்கு சேர்த்து ஈரப்பதம் இல்லாமல் லேசான தீயில் மொறுமொறுவென வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நெய்யிலேயே வறுபடும்பொழுது தேங்காய் ஈரப்பதம் இல்லாமல் வறுபடும். பின்னர் அதையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே 4 ஸ்பூன் அளவுக்கு நெய் விட்டு ரவையை சேர்த்து பொன் நிறமாக மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பை அணைத்து விட்டு மீண்டும் ஒருமுறை லேசாக கிளறி விட வேண்டும். பின் ஒரு மிக்சி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து ரவையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதை நன்கு கிளறி விட்டு இதனுடன் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு முறை நன்கு கலந்து விட்டு சூடாக இருக்கும் பாலில், அரை கப் அளவு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து விட வேண்டும்.
நீங்கள் ஊற்றும் பாலில் ரவை நன்கு ஊறிவிடும். பிறகு ஒரு ரெண்டு நிமிடம் மூடி போட்டு அப்படியே விட்டுவிட வேண்டும். பாலை ரவை முழுவதுமாக உறிஞ்சிக் கொள்ளும். இப்போது ரவை லட்டு பிடிக்க தயாராகி விட்டது. லட்டு போல ரவுண்டாக நன்கு அழுத்தம் கொடுத்து உருண்டை பிடித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான ரவா லட்டு தயார். (பால் சேர்த்து செய்வதால் இதை மூன்று நாட்கள் மட்டுமே வெளியில் வைத்து பயன்படுத்த முடியும். நெய் சேர்த்து செய்தால் கூடுதல் நாட்கள் வெளியில் வைத்து பயன்படுத்தலாம்.)