"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறமையாக கையாள்கிறார் என நடிகர் ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எ.வ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
"கலைஞர் மீது மிகுந்த மரியாதை" பின்னர் விழாவில் பேசிய ரஜினிகாந்த் “சமீபத்தில் அரசியலுக்கு நுழைந்து தன் கடின உழைப்பால் மக்கள் மத்தியில் அன்பைப் பெற்று அரசியலில் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அறிவார்ந்தோரின் சபையில் பேசாமல் இருப்பது தான் அறிவாளித்தனம். ஆனால் இப்போது பேசித்தான் ஆக வேண்டும். நான் பேசுவது எதாவது தப்பா இருந்தா மன்னித்துக்கொள்ளுங்கள். உலகத்திலேயே யாருக்கும் இந்த அளவுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட முடியாது. ஒரு பக்தர்கள் போல இந்த விழாவை நடத்தியுள்ளனர்.
வெளியில் நல்லவர்கள் எல்லாம் வீட்டில் நல்லவர்களாக இருப்பது சாத்தியம் கிடையாது. மு.க.ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் பெற்ற வெற்றியே அவரது ஆளுமையை சொல்லும். வெற்றிக்காக பலர் போராடிக்கொண்டிருக்கையில் அதை சர்வ சாதாரணமாக செய்கிறார்.
ஒரு வகுப்பறையில் டீச்சருக்கு புதிய மாணவர்களை பற்றி பிரச்னை இல்லை; பழைய மாணவர்கள் தான் சிரமமானவர்கள். அந்த வகையில் இங்கு நிறைய சீனியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பெயில் ஆகிப் போனவர்கள் அல்ல;
ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள். அவர்களில் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார் அவரைப்போல் பலர் இருக்கிறார்கள்; அத்தகைய சீனியர்களை சமாளிப்பது என்பது மிக கடினமான ஒன்று.
அவர்கள் அனைவரையும் சமாளித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஹார்ட்ஸ் ஆஃப் யூ. திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை மு.க. ஸ்டாலின் திறமையாக கையாள்கிறார். கலைஞர் என்றால் சினிமா, அரசியல், இலக்கியம்தான். கலைஞர் மீது மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” எனத் தெரிவித்தார்.
நூல் வெளியிட்டு விழா: மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய நூல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். கருணாநிதி உடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றியுள்ளார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து குழுமத்தின் என்.ராம் ஆகியோர் ஆய்வுரை வழங்குகினர். நூலை எழுதிய அமைச்சர் வேலு ஏற்புரையும் சீதை பதிப்பகத்தைச் சேர்ந்த கவுரா ராஜசேகர் நன்றியுரையாற்றினார்.