Pulianthope Issue: ‛ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை’ -பரந்தாமன்; ‛பாரபட்சமின்றி நடவடிக்கை’ -அமைச்சர்
கட்டுமானப் பணியில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தால் ஒப்பந்தாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பன்னடுக்கு கட்டடம் தொடர்பாக யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் வேடிக்கை பார்க்கமாட்டார் -அமைச்சர்
கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை என்று, புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக எம்எல்ஏ பரந்தாமன் கூறியுள்ளார்.
புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடைபெற்றபோது பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “தொட்டாச்சிணுங்கி போல் தொட்டால் விழும் கட்டடத்தை அதிமுக கட்டியுள்ளது. புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் மிக வேகமாக கட்டப்பட்டு இருக்கிறது. கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை. இதேபோல், புளியந்தோப்பு கட்டட ஒப்பந்ததாரர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன், “ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் இது. கட்டுமானப் பணியில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தால் ஒப்பந்தாரர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பன்னடுக்கு கட்டடம் தொடர்பாக யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் வேடிக்கை பார்க்கமாட்டார்” என்று பதிலளித்தார்.
முன்னதாக, இவர்கள் இருவரும் புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்புக்கு கட்டடம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது.
#BREAKING | புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் - ஓ.பி.எஸ். மீது கிரிமினல் நடவடிக்கை தேவை - பரந்தாமன், எம்.எல்.ஏ.https://t.co/wupaoCQKa2 | #Pulianthope | #chennai | #TNAssembly2021 | #DMK | #AIADMK | #MKStalin | #OPanneerselvam pic.twitter.com/UpfdnUBSB3
— ABP Nadu (@abpnadu) August 19, 2021
முன்னதாக, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர் பாபு உள்ளிட்டோர் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம் பகுதியில் உள்ள ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பரசன், “2019 ஆண்டு 864 வீடுகள் கட்டப்பட்டன. தற்போது மக்களின் வேண்டுகோளை ஏற்று கழிவுநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் சரி செய்து இந்த குடியிருப்பை ஆடி மாதம் முடிந்த பிறகு பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், அதற்குள் சிலர் இந்த கட்டடத்தில் குடியேறி விட்டனர். தற்போது இந்த கட்டடம் தொடர்பாக ஐஐடி ஆய்வு செய்ய பரிந்துரை செய்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்த பிறகு அவர்கள் கொடுக்கும் கட்டடத்தின் தன்மை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.
குடியிருப்புகளில் உள்ள வீட்டின் சுற்றுசுவர், பில்லர், படிக்கட்டுகள் இவை அனைத்தும் பெயர்ந்து பல ஆண்டுகள் ஆன கட்டடம் போல இருப்பதாகவும், இதனால், இந்தப் பகுதியில் இருக்க பயமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கடந்த 17ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தனர். இதுதொடர்பான செய்திகள் பத்திரிகைகள், டிவி சேனல்களிலும் வெளியானதைத் தொடர்ந்து, நேற்று சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிதிலமடைந்த இடங்களை பார்வையிட்டு, அவசர அவசரமாக பணியாளர்களை வரவழைத்து சிதிலமடைந்து கிடந்த அனைத்து இடங்களிலும் சிமெண்ட் வைத்து பூசி அதனை தெரியாத அளவுக்கு வண்ணம் பூசினர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது நாளாக அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது.