ஆட்சியர் தொடங்கி டாஸ்மாக் இயக்குநர் வரை : பெண்களின் ஆளுகையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம்..!
புதுக்கோட்டையில் ஆட்சியர் தொடங்கி டாஸ்மாக் நிறுவன இயக்குநர் வரை பல்வேறு பொறுப்புகளில் பெண் அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பெண்களின் ஆளுமை குறித்த பாரதியாரின் கனவு வரிகள் தற்போது சாத்தியமாக தொடங்கி உள்ளது. தமிழகத்தில் புதிதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஒரு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியரும், புதிய காவல் கண்காணிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியர் தொடங்கி முக்கிய அதிகாரம் உள்ள பல்வேறு பொறுப்புகளையும் பெண்களே நிர்வகித்து வருவது அம்மாவட்டத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்றுத்தந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியர் பொறுப்பில் இருந்த உமா மகேஸ்வரி மாற்றப்பட்டு மற்றொரு பெண் ஆட்சியராக கவிதா ராமு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே மாவட்ட கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபனும், கோட்டாட்சியராக அபிநயாவும், டிஎஸ்பியாக லில்லி கிரேஷ் ஆகியோரும் அண்மையில் பொறுப்பேற்றுள்ளனர்.
காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக ரம்யாதேவி, கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளராக பி.கீதா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக மு.பூவதி, சிறை காவல் கண்காணிப்பாளராக ருக்மணி பிரியதர்ஷினி, மாவட்ட சமூக நல அலுவலராக ரேணுகா, மாவட்ட தீயணைப்பு அலுவலராக பானுப்பிரியா, டாஸ்மாக் மாவட்ட மேலாளராக வசுந்தராதேவி, மாவட்ட சுகாதார துணை இயக்குநராக பா.கலைவாணி, மாவட்ட தொழில் மைய மேலாளராக திரிபுரசுந்தரி ஆகியோர் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பணியாற்றி வருகின்றனர்.
மேலும் கூட்டுறவு இணை பதிவாளராக உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநராக பிஜெ.ரேவதி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநராக டி.கே.செம்பகவள்ளி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக உம்மல் கதீஜா, நபார்டு வங்கி உதவி மேலாளராக ஜெயஸ்ரீ, அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வராக புவனேஸ்வரி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் துறைசார் ஆய்வுக்கூட்டங்களிலும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் அலுவலர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது