உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது: ஆளுநர் தமிழிசை தடாலடி..!
அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என பல்வேறு தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது.
மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள ஆளுநர்களுக்கும் பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் டெல்லி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
மாநில அரசுகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:
இத்தகைய சூழலில், மாநில அரசுகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது. அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என பல்வேறு தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. சமீபத்தில், தெலங்கானா சட்டப்பேரவைகளில் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கிலும் மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படும் விவகாரத்தில், டெல்லி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம், நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தெரிவித்தது.
"ஜனநாயக ஆட்சி முறையில், நிர்வாகத்தின் உண்மையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும். மத்திய அரசும், மாநிலங்களும் சட்டம் இயற்றக்கூடிய விஷயங்களில் மத்திய அரசின் அதிகாரம், ஆட்சியை மத்திய அரசு கையகப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன் கருத்து:
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தாது என கருத்து தெரிவித்துள்ளார்.
புதுவை கம்பன் விழாவை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, "உச்ச நீதிமன்றம், டெல்லி அரசுக்கான வழிமுறையை சொல்லி இருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று தனி கருத்து உள்ளது. ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறு தான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானதுதான். நீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்றார்.
டெல்லி யூனியன் பிரதேசத்துக்கான தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் தானே? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இந்த தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது. ஆளுநர்கள் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால்தான் ஆள்கிறோம்" என பதில் அளித்தார்.