Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
ஜிப்மர் சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டு வள மையம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையால் தேசிய அளவிலான சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி: ஜிப்மர் சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டு வள மையம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையால் தேசிய அளவிலான சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் மேற்கொண்ட சிறப்பான செயல்பாடுகள், தரமான ஆராய்ச்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டு வள மையம், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு, அவற்றின் செயல்திறன் மற்றும் செலவின பயன் உள்ளிட்ட அம்சங்களை அறிவியல் அடிப்படையில் மதிப்பீடு செய்து வருகிறது.
இந்த மையத்தின் செயல்பாடுகளை தேசிய அளவில் ஆய்வு செய்த மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறை, அதன் செயல்திறனை பாராட்டி தற்போது தேசிய அளவிலான சிறப்பு மையமாக அங்கீகரித்துள்ளது.
குறிப்பாக, குறுகிய காலத்திலேயே உயர்தரமான ஆராய்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தல், ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பிற வளங்களை திறம்பட பயன்படுத்துதல், மாநில அளவிலான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுதல் ஆகியவை ஜிப்மருக்கு இந்த உயரிய அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
30 ஆராய்ச்சி ஆய்வுகள் நிறைவு
2026-ம் ஆண்டு நிலவரப்படி, ஜிப்மர் சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டு வள மையத்தின் முதன்மை ஆய்வாளர் சிதான்சு சேகர் கார் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவக் குழு, இதுவரை 30 ஆராய்ச்சி ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.
அதேபோல், மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 40 திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்தக் குழு நடத்தியுள்ளது. மேலும், இந்த மையத்தின் ஆராய்ச்சிப் பணிகளின் அடிப்படையில் 31 சர்வதேச ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறுகிய காலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான தரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவற்றின் முடிவுகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டு சென்றிருப்பது, ஜிப்மரின் செயல்திறனுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
தேசிய சுகாதார முடிவுகளில் அதிக பங்களிப்பு
தேசிய சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம், இந்தியாவில் ஆதாரங்களின் அடிப்படையில் சுகாதாரத் துறைக்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் பணிகளில் ஜிப்மரின் பங்களிப்பு மேலும் விரிவடைய உள்ளது.
மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது, அவற்றின் அறிவியல் பூர்வமான பயன், செயல்திறன் மற்றும் தேவைகளை மதிப்பீடு செய்வதில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும், தேசிய அளவில் சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பான வழிமுறைகள் மற்றும் தரநிலைகளை உருவாக்குதல், ஆய்வுகளின் தர உத்தரவாதத்தை மேலும் பலப்படுத்துதல், முன்னணி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் ஜிப்மர் இனிவரும் காலங்களில் மேற்கொள்ள உள்ளது.
மண்டல மையங்களுக்கு வழிகாட்டல்
தேசிய சிறப்பு மையமாக உயர்த்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் செயல்படும் மண்டல அளவிலான வள மையங்களுக்கு ஜிப்மர் வழிகாட்டும் முக்கிய பொறுப்பையும் ஏற்க உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்களுக்கு பயிற்சி அளித்தல், மண்டல வள மையங்களின் செயல்பாடுகளுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளை சுகாதாரத் துறை நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பரவலாக கொண்டு செல்லும் பணிகளும் இந்த மையத்தின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கும்.
ஜிப்மர் இயக்குநர் பெருமிதம்
இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி கூறுகையில், “ஜிப்மரை தேசிய சிறப்பு மையமாக நிறுவியிருப்பது, இந்தியாவில் ஆதார அடிப்படையிலான சுகாதார மதிப்பீட்டை முன்னெடுப்பதிலும், நாட்டின் சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்,” என்றார்.
மேலும், மருத்துவத் தொழில்நுட்பங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்வதில் ஜிப்மரின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சிறப்பு மையம் என்ற புதிய அங்கீகாரம் மூலம், சுகாதாரத் துறையில் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை எடுக்கும் பணியில் ஜிப்மரின் பங்கு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியின் முக்கிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மருக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அதன் ஆராய்ச்சிப் பயணத்தில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















