மேலும் அறிய
வேலை தேடுவோருக்கு குட் நியூஸ்: புதுச்சேரி காவல்துறையில் குவியும் காலிப்பணியிடங்கள்... விரைவில் அறிவிப்பு...!
புதுச்சேரியில் குற்றங்கள் 2 சதவீதமாக குறைவு; விரைவில் 200 கடலோர ஊர்க்காவல் படை பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நமசிவாயம்
Source : ABP NADU
புதுச்சேரி காவல் துறையினருக்கான மாநில மாநாடு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரியில் குற்றங்கள் 2 சதவீதமாக குறைவு என்றும் விரைவில் 200 கடலோர ஊர்க்காவல் படை பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
விரைவில் கடலோர ஊர்க்காவல் படை பணியிடங்கள் நிரப்பப்படும்
புதுச்சேரி காவல் துறையினருக்கான மாநில மாநாடு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், புதுச்சேரி காவல்துறையின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமைச்சர் பேசுகையில், "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் வழிகாட்டுதலின்படி, காவல் நிலையங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வாரந்தோறும் நடத்தப்படும் 'மக்கள் மன்றம்' மூலம் இதுவரை 10,886 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, இதை மற்ற மாநிலங்களிலும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார்" என்றார்.
மேலும், 'ஆபரேஷன் திரிசூல்' மற்றும் 'ஆபரேஷன் விடியல்' ஆகிய திட்டங்களின் விளைவாக, புதுச்சேரியில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் 5.18 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வழக்குகளில் முதலிடம்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் புதுச்சேரி இந்திய அளவில் சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், "குற்றங்கள் நடந்த 60 நாட்களுக்குள் 89 சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் புதுச்சேரியும் கேரளாவும் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளன" எனப் பாராட்டினார்.
புதிய பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வு
- காவல்துறை காலிப்பணியிடங்கள் குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
- விரைவில் 70 சப்-இன்ஸ்பெக்டர்கள் (SI) மற்றும் 148 போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- 200 கடலோர ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
- ஊர்க்காவல் படையில் பணியாற்றும் 48 பேருக்கு கான்ஸ்டபிளாக பதவி உயர்வு வழங்கப்படும்.
ஊர்க்காவல் படை பணியில் சேர விரும்புவோர் மீது வழக்குகள் இருந்தாலும், அவர்களுக்குப் பணி வழங்கச் சட்டரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணி
பெண்களின் பாதுகாப்பிற்காக 'வீரமங்கை' திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இறுதியாகப் பேசிய அவர், அண்மையில் நடந்த த.வெ.க. மாநாட்டைப் போலீசார் திறம்படக் கையாண்டதைப் பாராட்டினார். மேலும், வரவிருக்கும் தேர்தலுக்குப் போலீசார் இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















