CENTAC : மருத்துவ மாணவர்களுக்கு சென்டாக் அறிவிப்பு: முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முக்கிய தகவல்!
புதுச்சேரியில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சென்டாக் (CENTAC) விண்ணப்ப அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சென்டாக் (CENTAC) விண்ணப்ப அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாகத் தள்ளிப்போன மாணவர் சேர்க்கைக்கான சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, விண்ணப்ப விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்டாக் முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கினாலும், எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்கவில்லை. குறைந்தபட்சம் விண்ணப்ப படிவம் கூட வழங்கப்படவில்லை. நீதிமன்ற வழக்கு காரணமாக முடிவுக்கு வரமால் தள்ளிபோனது. இதனால் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என மருத்துவ மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தற்போது அனைத்து சிக்கல்களும் தீர்த்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பம் விநியோகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வரும் 19ம் தேதி வரை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது, அதில் விண்ணப்பம் குறித்த அனைத்து தகவல்களும் சென்டாக் குறிபிட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு 1,500 ரூபாய், இதர பிரிவினருக்கு 3 ஆயிரம் ரூபாய் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாக இடங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெட்டிட் கார்டு, UPI யு.பி.ஐ., பாரத் கியூக் ரெஸ்பான்ஸ் எனும் பி.கியூ.ஆர் வழியாக செலுத்தலாம்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றி நிரப்பப்படும்
மாநிலத்தில் பிம்ஸ், வெங்கடேஸ்வரா என இரண்டு சிறுபான்மையினர் மருத்துவ கல்லுாரி உள்ளன. இதில் பிம்ஸ் மருத்துவ கல்லுாரி, இப்போது சிறுபான்மையினர் கல்லுாரி என்ற அந்தஸ்த்தில் இருந்து கடிதம் கொடுத்து விலகியுள்ளது. வழக்கமாக பிம்ஸ் மருத்துவ கல்லுாரி முதுநிலை மருத்துவ சீட்டுகள், புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ சிறுபான்மையின மாணவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து சீட்டுகளை நிரப்பும். அதில் நிரம்பாத இடங்கள் அடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றி நிரப்பப்படும்.
நான்கு மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் 370 சீட்டுகள்
இதில் புதுச்சேரியின் இதர பிரிவு மாணவர்களும், பிற மாநில மாணவர்கள் சேரலாம். தற்போது பிம்ஸ் சிறுபான்மையினர் கல்லுாரி என்ற அடையாளத்தில் இருந்து விலகியுள்ளதால் 50 சதவீத இடங்கள் புதுச்சேரிக்கும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் நேரடியாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் சேர்க்கைக்கு செல்லும். புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஷ்வரா உள்ளிட்ட கல்லுாரிகளில் எம்.டி., எம்.எஸ்., படிப்புகள் உள்ளன. இந்த நான்கு மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் 370 சீட்டுகள் உள்ளன.
அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை படிப்புகள் எண்ணிக்கை அதிகரிப்பு
இதில் அரசு ஒதுக்கீடாக 186, நிர்வாக இடங்கள் 156, அகில இந்திய இடங்கள் 28 இடங்கள் என்ற அடிப்படையில் நிரப்பப்பட்டது. இந்தாண்டு அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை படிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு மருத்துவ கல்லுாரியில் 52 முதுநிலை மருத்துவ சீட்டுகள் இருந்த சூழ்நிலையில் கூடுதலாக 16 சீட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எண்ணிக்கையும் இந்தாண்டு அதிகரிக்கிறது.





















