தலைக்கேறிய போதை; கத்தியை காட்டி தீப்பெட்டி கேட்ட சில்வண்டு... சுளுக்கெடுத்த போலீஸ்
புதுச்சேரியில் ஜூவல்லரி கடைக்குள் புகுந்து, மதுபோதையில் தீப்பெட்டி கேட்டு பெண்களை மிரட்டிய,சென்னை போட்டோகிராபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரி 45 அடி சாலையில் பேஷன் ஜூவல்லரி கடைக்குள் புகுந்து, மதுபோதையில் தீப்பெட்டி கேட்டு பெண்களை மிரட்டிய,சென்னை போட்டோகிராபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ரெயின்போ நகர் அருகே 45 அடி சாலையில் கவரிங் நகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 3-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் மது போதையில் கடைக்குள் நுழைந்த நபர், அங்கு வேலை பார்க்கும் பெண்களை ‘பேபி’ என்று அழைத்து அவர்களுக்கு தொந்தரவு அளித்துள்ளார்.
சிகரெட்டை பற்றவைக்க வத்திப்பெட்டி தரவில்லை என்றால் கொலை செய்வேன் என்று கத்தியை காண்பித்து மிரட்டல் விடுவதும், ஆபாசமாக கொச்சையாக பேசுவதும் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து, அவா்கள் தீப்பெட்டி கொடுத்ததுடன், வெளியே சென்று புகைக்குமாறும் கூறியுள்ளனர். ஆனால், அந்த நபா் பெண் ஊழியா்களை தொடா்ந்து மிரட்டியதுடன், கடைக்குள்ளேயே நின்று புகைப் பிடித்துள்ளார். பெண் ஊழியா்களை மிரட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
இந்தநிலையில், கொலை மிரட்டல் விடுத்த சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த 42 வயது வாலிபர் பழனி புதுச்சேரி பெரிய கடை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் உத்தரவின் பேரில் பெரிய கடை காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை வாலிபரை கைது செய்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பழனி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் சென்னை, செங்குன்றம், எடப்பாளையம், ஜீவா நகரைச் சேர்ந்த போட்டோ ஸ்டுடியோ நடத்தும் பழனி, 44; என்பதும், நண்பர்களுடன் புதுச்சேரிக்கு 45 அடி சாலையில் உள்ள மதுபான பாரில் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். போதை தலைக்கேறிய பழனி பேஷன் ஜூவல்லரி கடைக்குள் புகுந்து பெண்களை மிரட்டியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பழனி, 'புதுச்சேரி மக்களே என்னை மன்னித்து விடுங்கள். அதிக மதுபோதையில் 3 பெண்களிடம் தவறாக பேசிவிட்டேன். மூன்று பெண்களும் என்னை மன்னித்து விடுங்கள். புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் இதுபோல் யாரும் செய்யாதீர்கள். பெண்கள் நம் நாட்டு கண்கள் என மன்னிப்பு கேட்கும் வீடியோவை பெரியக்கடை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ க்கு மிரட்டல் விடுத்த ரவுடி
இதேபோல், புதுச்சேரி, கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில், திலாஸ்பேட்டை ரவுடி ராமு, 35, சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். நகராட்சி ஒதுக்கி கொடுத்த இடத்தையும் தாண்டி பல அடிக்கு இடத்தை ஆக்கிரமித்து கடை நடத்துவதால் அங்குள்ள மற்ற கடைக்காரர்களுடன் பிரச்னை ஏற்பட்டது.
இது தொடர்பாக, ஜிப்மர் வணிக வளாக வியாபாரிகள், புதுச்சேரி வியாபாரிகள் சங்க பொறுப்பில் உள்ள சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கரனிடம் இதுகுறித்து முறையிட்டனர். சிவசங்கரன் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜிடம், ஜிப்மர் எதிரில் வணிக வளாக கடைகள் ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இதையறிந்த ராமு, நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையத்தில் உள்ள சிவசங்கரன் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, பொதுமக்களிடம் குறை கேட்டு கொண்டிருந்த எம்.எல்.ஏ.விடம், 'ஜிப்மர் கடை விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்.
'எனக்கு முதல்வரை நன்கு தெரியும். கடை விவகாரத்தில் தலையிட்டால் பலவற்றை சந்திக்க நேரிடும்' என, மிரட்டி சென்றார். அப்போது, என்னை பற்றி எம்.எல்.ஏ.வுக்கு தெரியவில்லை என, ஆதரவாளர்கள் மத்தியில் கூறிவிட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக, சிவசங்கரன் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். ரவுடி ராமு மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். ராமு மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.