டார்கெட் வைக்கும் பாஜக: பிப்.18ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி: ப்ளான் இதுதான்!
இன்றும் நாளையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்.18ல் திருப்பூர் வரும் பிரதமர் மோடி:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றும் நாளையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளையும் சந்தித்து மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழகம் வருவது, பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3வது முறையாக தமிழகம் வரவிருக்கும் பிரதமர் மோடி:
முன்னதாக ஜனவரி மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி திருச்சி வருகை தந்து, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, இரண்டாவது முறையாக கடந்த 19ம் தேதி 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். அப்போது, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்ததோடு, ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஷ்வரம் பகுதிகளில் உள்ள புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டார். இந்நிலையில், தான் மூன்றாவது முறையாக வரும் பிப்ரவரி 18ம் தேதி மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான தேதி அடுத்த சில வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேசிய கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை அனைத்துமே, தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதிலும் பாஜக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக நடப்பாண்டு தேர்தலில் தமிழகத்தில் கணிசமான வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இதனை உணர்த்தும் விதமாகவே 2 மாத இடைவெளிக்குள் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். நீலகிரி, கோவை மற்றும் தென்சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. , அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் தமிழ்நாட்டிற்கான தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த குழு விரைவில் சென்னை வந்து, மாநில தலைமையுடன் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசியல் சூழலுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை வகுத்து, தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம் என்றும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.