’சாமி காப்பாத்தணும்...’ செந்தில் பாலாஜி குணமடைய வேண்டுதல்.. மொட்டை போட்டு அன்பை வெளிப்படுத்திய ஆதரவாளர்கள்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது அதிமுக ஆட்சியில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக கட்சியில் சேர்ந்தவுடன் செந்தில் பாலாஜிக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அரவக்குறிச்சி தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளராக போட்டியிட்டு 23 மே 2019 அன்று எம்.எல்.ஏ.வாக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து, கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஐந்தாவது முறையாக கரூர் சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, திமுக அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.
வழக்கு விவரம்:
கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடி காவல்துறையினர் செந்தில் பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்தனர். அந்த வழக்கானது தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. இப்படியான சூழ்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்த நிலையில், கடந்த 13ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜி மனைவி செய்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், காவேரி மருத்துவமனையில் கரோனரி ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டும் என்றி கருர் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள், கரூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் மொட்டை அடித்து வேண்டுதல் நிறைவேற்றினர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன சிகிச்சை..?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆஞ்சியோ முடிந்த பின்னர், அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு 3 அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அறுவை சிகிச்சைக்கான நேரம் ஒதுக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.