பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தடை எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு... உஷார் நிலையில் காவலர்கள்
புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் முன்பும், மண்ணடி, திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், ஜாம் பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் தடை செய்து மத்திய அரசு முன்னதாக உத்தரவிட்டுள்ளது.
என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
கடந்த செப்டெம்பர் 22ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பல்வேறு அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மதச்சார்பற்ற இயக்கங்களும் போராட்டங்களில் குதித்தனர்.
தொடர்ந்து சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வீடுகள் மீது மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
5 ஆண்டுகள் தடை
Central Government declares PFI (Popular Front of India) and its associates or affiliates or fronts as an unlawful association with immediate effect, for a period of five years. pic.twitter.com/ZVuDcBw8EL
— ANI (@ANI) September 28, 2022
இத்தகைய சூழலில் இன்று (செப்.28) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என மத்திய அரசு அறிவித்து இந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளது.
ரெகப் இந்தியா பவுண்டேஷன் (RIF), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் (AIIC), தேசிய மனித உரிமைகள் அமைப்பு (NCHRO), நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா போன்ற அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
உஷார் நிலையில் போலீஸ்
இந்நிலையில் மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையிலும், போராட்டங்கள் நடைபெறாத வகையிலும் தடுக்க தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவுப் பிரிவு முன்னதாக அறிவுறுத்தியுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tamil Nadu | Police personnel deployed outside PFI district office in Coimbatore as Central govt today declared #PFI & its associates unlawful for 5 years pic.twitter.com/BIkeiYqkjK
— ANI (@ANI) September 28, 2022
தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக சென்னை மாநகரில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் முன்பும், மண்ணடி, திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், ஜாம் பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வலுவாக உள்ள இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.