Opposition Condemns Governor: ஆளுநர் ஆர்.ரன்.ரவி பதவி விலக வேண்டும் - பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுத்தல்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்து மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது, அரசின் நடவடிக்கைகளுக்கு நெருக்கடி அளிப்பது உள்ளிட்ட சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருதாக கருத்துகள் எழுந்து வருகின்றன. ஆளுநரின் பல மேடைப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ’நாட்டை குடும்பமாக பார்க்க வேண்டும்; பகுதி வாரியாகவும் மொழி வாரியாகவும் மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது.” என்பதில் தொடங்கி, ”சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, நிலுவையில் வைக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதே பொருள்” என்று தொடர்ந்து இப்போது முதலமைச்சரிடம் கலந்தாலோசிக்காமலே மாநில அமைச்சரின் பதவி நீக்க அறிவிப்பு வரை வந்து நிற்கிறது.
நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை, திராவிட கொள்கை, சனாதனம் என்று தொடர்ச்சியாக இவரின் சர்ச்சையான கருத்துக்களின் பட்டியல் நீளும். தமிழ்நாட்டின் ஆளுநராக மட்டும் செயல்படாமல், ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரதிநிதியாக செயல்படுவதாக இவர் மீது அதிருப்தி தொடர்ந்து வருகிறது. இப்போது, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் பல நாட்களாக நீடித்து வருகிறது. அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தரப்பிடமிருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் பல ஆளுநரை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படுவது முறையானது இல்லை என்றும், அவரை பதவி நீக்கக் கோரியும் கடந்த 21-ம் தேதியன்று ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆளுநரை நீக்க கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் பலரும் கையெழுத்திட்டுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முதல் கையெழுத்திட்டு இந்த முன்னெடுப்பை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.ரன்.ரவி பதவி விலக வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.
கம்யூனிஸ்ட்
, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து, அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி உருவாக்கக் கூடிய பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ரவி. ஆளுநர் பொறுப்பிற்கே களங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் உள்ளன.அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவிக்கையில், “தனது அதிகார வரம்புகளை மறந்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் போக்கு ஜனநாயகத்திற்கு, அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. தி.மு.க. அரசுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். இதை வி.சி.க. கடுமையாக கண்டிக்கிறது. அவர தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டாலும் மறுபடியும் நெருக்கடி அளிக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க, அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும். மணிப்பூர் விவகாரம், ஆளுநர் விவகாரம் குறித்து ஆலோசிக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
கி.வீரமணி அறிக்கை
”ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையேல் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்" என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மனித நேய மக்கள் கட்சி
”மக்களின் உணர்வுகளோடு ஆளுநர் விளையாடி வருகிறார். முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அமைச்சரை நீக்குவதற்கான உரிமை ஆளுநருக்கு இல்லை.” என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டித்துள்ளார்.