மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணத்தில் காவல்துறை, மருத்துவத்துறையின் கூட்டுச்சதி உள்ளது - மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
''காவலர் குடியிருப்பில் சிசிடிவி பதிவுகளை அழிக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் ஆய்வாளர் சதீஷ் மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்''
சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் கடந்த 8 ஆம் தேதி சேந்தமங்கலம் காவல்நிலையத்தினரால் கைது செய்யது அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் 12 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது உயிரிழந்துவிட்டார். இந்த வழக்கு காவல் சித்தரவதை என்று பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டிவரும் நிலையில், இந்த சம்பவத்தில் உள்ள உண்மை தண்மையை அறிவதற்காக மக்கள் கண்காணிப்பகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் தலைமையில், வழக்கறிஞர் அசோகன், தமையந்தி, காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் செந்தில்ராஜா, வசந்த் உள்ளிட்டோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் கண்காணிப்பகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கூறுகையில், மாற்றுத்திறனாளி மரணத்தில் காவல்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். பிரபாகரன் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது கருப்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜனுக்கு தெரிந்துதான் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட பின், பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமல் சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் கூறியதன் பேரில் பிணைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பிரபாகனை சட்டவிரோதமாக கைதுசெய்ததும், காவலர் குடியிருப்பில் அடைக்கப்பட்டதும் சேந்தமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் சதீஷுக்கு தெரியும், காவலர் குடியிருப்பில் சிசிடிவி பதிவுகளை அழிக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் ஆய்வாளர் சதீஷ் மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் பிரபாகரன் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார். அதனால் சிறை கண்காணிப்பாளர் தினேஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
100 சதவீத மாற்றுத்திறனாளியான பிரபாகரன் நீதித்துறை நடுவர் ஹரிஹரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நிலைகுலைந்து கீழே விழுந்ததை கண்டும், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அதனால் நீதித்துறை நடுவர் ஹரிஹரன் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 12 ஆம் தேதி பிரபாகரன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது 7 மணிக்கு பிணை கிடைத்துள்ளது. இதனை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் காவல்துறையினர் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். ஆனால் பிரபாகரன் இறந்தபின்னர் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டதும் தவறு என்று சுட்டிக்காட்டிய அவர், காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போதுதான் அவர் இறந்துள்ளார். அதனால் 176-1ஏ என்று பதிவு செய்ய வேண்டும் என்றார்.
எனவே சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கும் இதில் தொடர்பு உள்ளது என்றார். பிரேதபரிசோதனை முடிந்தவுடன் அதன் அறிக்கையும், வீடியோ பதிவையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அதனை வழங்கவில்லை. காவல்துறையை காப்பாற்ற மருத்துவ துறையும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளது என்றார். காவல்துறை, மருத்துவதுறை, நீதித்துறை சேர்ந்து காவல்சித்தரவதையை தமிழகத்தில் ஊக்குவிப்பதால் இதுபோன்ற காவல்படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதனால் தமிழக முதல்வர் காவல்துறை மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார். வருவாய் கோட்டாட்சியரும் இதுவரை விசாரணை மேற்கொள்ள வில்லை. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது கையில் எடுத்துள்ளனர். விரைவாக இந்த வழக்கில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றார். பாதிக்கப்பட்டவர் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வண்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யாதது வேடிக்கையாகவும், ஆச்சரியமாக உள்ளது. யாரையோ பிடிக்க நினைத்த போலீசார், பிரபாகரனை பிடித்துள்னர். அவரது மகன் ஆன்லைனில் புகார் தெரிவித்ததையடுத்து வேறு வழியில்லாமல் சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறினார்.