DMK Petition: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடியின் தியானத்தை ரத்து செய்யக்கோரி திமுக மனு
PM Modi Meditation: விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடியின் தியானத்துக்கு அனுமதி வழங்க கூடாது என திமுக காங்கிரஸ் , சிபிஎம் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில், விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடியின் தியானத்தை ரத்து செய்யக்கோரி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மனு அளித்துள்ளன.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது, பிரதமர் மோடியின் தியான நிகழ்வானது, தேர்தல் நடத்தை விதி மீறலாகும் என திமுக புகார் தெரிவித்துள்ளது.
தியான நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி மறைமுகமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
விவேகானந்தர் பாறையில் பிரதமர் தியானம்:
மே 30ம் தேதியான நாளை கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடி, பிற்பகல் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானம் செய்ய இருக்கிறார். 30ம் தேதி பிற்பகல் தொடங்கும் இந்த மோடியின் தியானமானது ஜூன் 1ம் தேதி வரை தொடர்கிறது. ஜூன் 1ம் தேதி தியானத்தை முடித்துக்கொள்ளும் மோடி, அன்றைய தினம் கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.
தொடர்ந்து இரண்டு நாள்கள் தியானம் செய்யும் பிரதமர் மோடி:
30ம் தேதி பிற்பகலில் தியானத்தை தொடங்கும் பிரதமர் மோடி, 1ம் தேதி காலை வரை தியானம் செய்ய இருக்கிறார். அதாவது இரண்டு இரவு ஒரு பகல் முழுவதும் தியானம் செய்கிறார்.
30ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி:
மே 30ம் தேதி பஞ்சாப் மாநில ஹோஷியார்பூரில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிறகு, தமிழ்நாடு வரும் மோடி அன்று மாலை இந்த தியானத்தை தொடர இருக்கிறார்.
பிரதமர் மோடி தியானம்:
2024ம் ஆண்டுக்கு முன்னதாக, 2019 மக்களவை தேர்தலின்போதும் மே 18ம் தேதி அன்று பிரதமர் மோடி கேதர்நாத்தில் தியானம் செய்தார். கடந்த 2019ம் ஆண்டு மே 18ம் தேதி மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த மறுநாள், கேதார்நாத்தின் ருத்ரா குகையில் மோடி தியானம் செய்தார். சுமார் 17 மணி நேரம் இந்த குகையில் அவர் தியானம் செய்துள்ளார்.
அதன்பிறகு, பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அதேபோன்று மீண்டும் தியானத்தில் ஈடுபட்டு, 3வது முறையாக பிரதமராக அமர்வார் என்று நம்பப்படுகிறது.
தியானத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் புகார் மனு:
மக்களவை தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வருகின்ற ஜூன் 1ம் தேதி உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது
இந்நிலையில், மோடியின் தியான நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி மறைமுகமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக, திமுக புகார் மனு அளித்துள்ளது.
திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தியானத்துக்கு அனுமதி வழங்க கூடாது என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
மேலும் தியானத்துக்கு அனுமதி வழங்க கூடாது என தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
PM Modi Kanyakumari Visit: விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக தியானம்! பிரதமர் மோடி ப்ளான்!