தமிழக ஆளுநர் நடவடிக்கை சர்வதிகார போக்கு - செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
குற்ற வழக்கு நிலுவையில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ஆளுநர் உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.. - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை
சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள, அரசு செயலர் விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் இரா.ஜெகநாதனுக்கு ஆளுநர் ஒராண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கி இருப்பது உயர்கல்வியின் மாண்புக்கும், மரபுக்கும் எதிரானதாகும்.
எனவே அந்த பணி நீட்டிப்பை ஆளுநர் உடன் ரத்து செய்ய வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் இரா.ஜெகநாதனின் மூன்றாண்டுகால பதவிக் காலம் கடந்த 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதனால் பல்கலைக்கழக சாசன விதிகளின் படி ஆட்சிக்குழுவின் பிரதிநிதி ஒருவரும்,ஆட்சிப் பேரவையின் பிரதிநிதி ஒருவரும் தேர்வு செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அதேபோல அக்குழுவின் அமைப்பாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நிலையிலான ஒருவர் பெயர் ஆளுநருக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அந்த மூன்று பெயர்கள் அடங்கிய பட்டியல் ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்டு அந்த அறிவிப்பு அரசிதழில் வெளியான பின்பு புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகள் தொடங்கும்.
பெரியார் பல்கலைக்கழக பணி நீடிப்பு சர்வதிகார போக்கு
பெரியார் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் ஆட்சிக்குழுவின் பிரதிநிதியாக பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் எம்.தங்கராசு அவர்களும் ஆட்சிப்பேரவையின் பிரதிநிதியாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாஸ்கர் அவர்களும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு இருவர் பெயர் அடங்கிய அப்பட்டியல் பல்கலைக்கழகத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகிறது.
அதேபோல குழுவின் அமைப்பாளர் பெயர் உயர்கல்வித்துறையிலிருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்துக்கான புதிய துணைவேந்தர் தேடுதல் தேர்வுக் குழுவுக்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை.
மாறாக சர்ச்சைக்குரிய அந்த துணைவேந்தருக்கே பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசின் பழனிச்சாமி ஐஏஎஸ் தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கை தமிழ்நாடு அரசால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. அதன் மீதும் ஆளுநர் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல சேலம் கருப்பூர் காவல்நிலையத்தில் துணைவேந்தர் முனைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தால் தடை தான் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு ரத்து செய்யப்பட வில்லை. அதேபோல அவர் மீதான ஜாமீன் ரத்து வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மூன்றாண்டு காலம் மோசமான நிர்வாகத்தால் பல்கலைக்கழகத்தைப் பாழ்படுத்திய முனைவர் ஜெகநாதனின் பின்னணி இப்படி இருக்க அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கல்வியில் அரசியல் செய்யக்கூடாது..
மேலும், பழனிச்சாமி கமிட்டியின் விசாரணை அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காமலும்,புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவின் அறிவிப்பை வெளியிடாமலும் ஆளுநர் மாளிகை திட்டமிட்டே தாமதம் செய்து இந்த பணி நீட்டிப்பை வழங்கி உள்ளதாக தெரிகிறது.
புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கான தேர்தல் நடைமுறைகள் அரசிதழில் வெளியிடப்பட்டு ஆட்சிக் குழு, ஆட்சிப்பேரவை பிரதிநிதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. அவற்றைத்தூக்கி குப்பையில் போட்டு விட்டு ஆளுநர் சர்ச்சைக்குரிய நபருக்கு பணி நீட்டிப்பு வழங்கி இருப்பது சட்ட விரோத சர்வாதிகார போக்கு ஆகும்.
அதேபோல் பழனிச்சாமி கமிட்டி அறிக்கையில் நிரூபிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் மீது ஜெகநாதன் மீது ஆளுநர் குற்றவியல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசு அமைத்த விசாரணைக்குழுவின் விரிவான அறிக்கை மீது ஆளுநர் இன்றுவரை மௌனமாக இருப்பது ஏன்?
உயர்கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளை ஈட்டி உயர்க்கல்வியில் தன்னிகரில்லாத தமிழகம் என்ற நிலையில் நிற்கும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் திட்டங்களை முடக்கும் வண்ணம் சென்னை,பாரதியார் கல்வியியல் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுக்களில் விதிகளில் இல்லாத யு.ஜி.சி. நாமினியை நியமித்து அப்பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் தேர்வில் முட்டுக்கட்டைப் போட்டிருப்பது ஆளுநர் மாளிகை என்பதனை அனைவரும் அறிவர்.
இன்றைக்கு அந்தப் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு முழுமுதற் காரணம் ஆளுநர்தான்.
இப்போது அந்த வரிசையில் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளவரே துணைவேந்தராக நீட்டிக்க ஆளுநர் ஆணை வழங்கி இருப்பது பல்கலைக்கழகம் எனும் மாண்புக்கும், மரபுக்கும் எதிரானதாகும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஆளுநர் உடனடியாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பணிநீட்டிப்பை ரத்துசெய்ய வேண்டும். அப்போது தான் பல்கலைக்கழகத்தின் மாண்பும் துணைவேந்தர் பதவிக்கான பெருமையும் நிலைக்கும்.
உயர்கல்வித்துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்புக்கு சவால் விடும் வண்ணம் இந்த பணி நீட்டிப்பை ஆளுநர் வழங்கி இருப்பதாக கருதுகிறோம். மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன் என் தெரிவித்துள்ளார்.