TN Goverment: ஆம்புலன்ஸ்க்கு வழிவிடத் தவறினால்... தாறுமாறாக அபராதத் தொகையை உயர்த்திய தமிழக அரசு
TN Goverment: ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Goverment: ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது, வழிவிட தவறினாலோ, அதற்கு இடையூறாக செயல்பட்டாலோ சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூபாய் 10,000 அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த ரூபாய் 5,000, ரூபாய் 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில், வாகனத்தை ஓட்டுதல், மாசு ஏற்படுத்தும் வாகனங்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் தேவையற்ற ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தனாலும் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த அபராதத் தொகைகளை உயர்த்தி புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை மது அருந்திவிட்டு வாகன ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுடன் பயணம் செய்யும் மது குடிக்காத அனைத்து நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆட்டோ ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய விதியானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தனர். சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டு, பல விபத்துகளை சந்திக்கின்றனர். இதுவரை சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கான அபராத தொகையை ரூபாய் 10,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.