TR Balu Statement: "ஆளுநர் மாளிகையே... அடக்கிடு வாயை..." - ஆளுநரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட டி.ஆர் பாலு..
சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஜாதி வாரியாக பிரித்து மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள் என்ற ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி. டி.ஆர். பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்றுவதற்கு மாநில அரசு முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாக, தியாகிகள் பற்றி பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்த பாடங்களை நீக்க மாநில அரசு முயற்சிக்கிறது என விமர்சித்து பேசியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்குச் சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.
அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம்!
ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள், தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று உளறினார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழைப் பின் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக்குறள் எழுதப்பட்டதாகச் சொன்னார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது.
வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றிவரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்துவிட்டதாம். பா.ஜ.க. தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார்.
பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து மத்திய பா.ஜ.க. அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? அந்த ஊர்திகளை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வைத்து- ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சி ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த திரு ரவி மறந்து விட்டரா? அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை?
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்திய விடுதலையின் வெள்ளிவிழா ஆண்டில் விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் அன்றைக்கு உயிருடன் இருந்த மூத்த தலைவர்களின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு தாமிரப் பட்டயத்தை வழங்கினார் கலைஞர். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மதிப்பூதியம் (பென்ஷன்) வழங்கப்பட்டது. தற்போது அந்த மதிப்பூதியம் மாதம் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறது திராவிட மாடல் அரசு. அது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15 அன்று விடுதலை நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றியபோது முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார்.
விடுதலை நாள் உரையில் இந்திய விடுதலையில் தமிழ்நாட்டின் பங்கு முதன்மையானது, முக்கியமானது என்பதை மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர்.விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.
விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் ஏன் இந்தளவுக்குப் போற்றுகிறோம் என்றால், தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில் - விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கங்கள் வீரம் விளைந்த தமிழ் மண்ணில் தோன்றியவைதான் என்பதை நாம் பெருமிதத்தோடு நினைவு கூரமுடியும் என்று விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றினார்.
முதலமைச்சர் தமிழில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்களைப் பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும். ஆதாரமற்ற பொய்களை வாட்ஸ்அப் வதந்திகள் போல பரப்புவதையாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம்.
பா.ஜ.க.வின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், ‘திராவிடம்’ என்ற சொல். அந்த சொல் நிலத்தைக் குறிக்கும், இனத்தைக் குறிக்கும். மொழிக்குடும்பத்தைக் குறிக்கும். இந்தியா முழுவதும் திராவிட மாடல் பற்றிப் பேசப்படுகிறது.
அந்த வயிற்றெரிச்சலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என்று விமர்சித்திருக்கிறார். கால்டுவெல் என்ன படித்தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும் அதன் விளைவும்தான் மக்களிடம் செல்வாக்கைத் தரும். ஆளுநர் ரவியின் பார்வைப்படி, அவர் பெருந்தலைவர் காமராசரையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பி.ஹெச்.டி ஆய்வுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட தலைப்புகள்- குறிப்பாக திராவிடத்தைப் பற்றிய தலைப்புகள் அவருக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பித்தம் ஏறச் செய்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஆய்வுகள் இல்லையாம். மகாகவி பாரதியைப் பற்றி, வ.உசி. பற்றி, விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் உண்டு. பி.ஹெச்.டியாக மட்டுமல்ல, வெகுமக்கள் வாங்கிப் படிக்கக்கூடிய புத்தகங்களாகப் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதுபோலவே, திராவிட இயக்கப் படைப்புகள் - படைப்பாளிகள் பற்றிய ஆய்வுகளும் நிறைந்திருக்கின்றன. இதைக் கண்டு ஆளுநர் வயிறெரிந்திருக்கிறார்.
விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.
விடுதலையின் பயன் யாருக்குக் கிடைக்கும் என்பதை விளக்கிய பெரியார், ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற பிற்போக்குவாத பத்தாம்பசலிகளின் கைகளில் அதிகாரம் சிக்கி நாசமாகும் என தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னார். அந்த தந்தைப் பெரியார்தான், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாதச் செயலாக, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றது கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறியவர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’கடைப்பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் ரவிதான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர்! தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு - தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு- திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்! இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி- அரசியல்வாதியாக- ஏன் பா.ஜ.க.வின் தலைவராகவோ- ஆர்.எஸ்.எஸ்.-ஸின் தலைவராக ஆகட்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.