விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படும் பல்லவர் கால சிலைகள்..
விழுப்புரம் மாவட்டத்தில் தொடந்து கண்டெடுக்கப்படும் பல்லவர் கல சிலைகள் மற்றும் உறைகிணறுகள் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம் அருகே உள்ளது பிடாகம் குச்சிப்பாளையம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவர் அளித்த தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் சிறியதும் பெரியதுமான உறைகிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டன.
இதுபற்றி செங்குட்டுவன் கூறியதாவது:-
பிடாகம் குச்சிப்பாளையம் எல்லைக்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றில் களஆய்வு செய்தோம். அப்போது அளவில் சிறியதான உறை கிணறு இருப்பதை கண்டறிந்தோம். 6 அடுக்குகளுடன் காணப்படும் இந்த உறை கிணறு சங்க காலத்தை சேர்ந்ததாகும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கோடை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்கவும், தெளிய வைத்து தண்ணீரை அருந்தவும் நீர்நிலை பகுதிகளில் உறை கிணறுகளை மக்கள் ஏற்படுத்தினர்.
மேலும் இதுபோன்ற சிறியதும் பெரியதுமான பல உறைகிணறுகள் இப்பகுதி தென்பெண்ணை ஆற்றில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இப்பகுதியில் சங்ககால பொதுமக்கள் பயன்படுத்திய சுடுமண் குழாய்கள், மண்ணால் ஆன விளையாட்டு கருவிகள் மற்றும் அம்மி போன்ற புழங்குப்பொருட்களும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகின்றன.
எனவே இப்பகுதி மக்கள் வாழ்விடமாக இருந்து பின்னர் அழிந்திருக்க வேண்டும். பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள உறைகிணறுகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசின் தொல்லியல் துறையும், விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழழகன், விஷ்ணுபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
விழுப்புரம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு:-
விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் சோழர்கால கல்வெட்டை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் த.ரமேஷ், விழுப்புரம் கணிப்பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:- ஊரின் வடக்கே செய்தருளி ஈஸ்வரர் என்னும் பழமையான சிவன் கோவில் கருவறையின் தென்கிழக்கு பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டான கி.பி. 1,072-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இவ்வூரை கப்பூர் என்றும், இங்குள்ள இறைவனை செய்தருளு நாயனார் என்றும் அழைக்கிறது.
மேலும் இங்கே சந்தி விளக்கு எரிப்பதற்கு 3 பசுக்களை தானமாக இக்கோவிலை நிர்வகித்த நேராபிராணன் என்பவனிடம் வழங்கியதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றில் இருந்து இவ்வூர் சோழர் காலத்தில் இருந்து கப்பூர் என்று வழங்கப்பட்டதை அறிகிறோம். இக்கோவிலில் பல்லவர் காலத்திய 2 விஷ்ணு சிற்பங்களும் ஒரு விநாயகர் சிற்பமும் மீசையுடன் கூடிய லகுலீசர் சிற்பமும் வரலாற்று சிறப்புமிக்கவை.
எனவே பல்லவர் காலத்திலேயே இவ்வூரில் ஒரு சிவன் கோவில் இருந்து பின்பு சோழர் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோவிலின் அதிட்டானம் மட்டும் கருங்கல்லை கொண்டும் மற்ற பகுதிகள் செங்கலை கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் தற்போது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறையினர் பராமரிக்க வேண்டும்” என அவர்கள் கூறினர்.