"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
தமிழக ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தொன்மையான நாகரீகத்தின் குறியீடு"
திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி எனக் கூறிய அவர், தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அதில் வரக்கூடிய "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும்.
இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி! திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு!
இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 18, 2024
"தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்"
என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது
மாபெரும் தவறாகும்.
இச்செயல் மிகவும்…
தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதா?
சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பாடப்பட்ட தேசிய கீதத்தில் 'திராவிடம்' என்று வரும் வரியை பாடிய போதிலும், தமிழ் தாய் வாழ்த்தில் வரும் வரி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.