Odisha Train Accident: ஒடிசா விரையும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.. மீட்பு பணிகள் குறித்து உறுதி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயிலில் சரக்கு ரயில் மோதியதில் கோரமண்டல் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.
ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயிலில் சரக்கு ரயில் மோதியதில் கோரமண்டல் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இந்நிலையில் மீட்புப் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என உறுது அளித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மூன்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர். இவர்கள் நாளை காலை முதல் விமானத்தில் சென்னையில் இருந்து ஒடிசா விரைவதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். மேலும், இவருடன் போக்குவரத்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் அடங்கிய குழு நாளை காலை முதல் விமானத்தில் ஒடிசா செல்லவுள்ளதாக ஏபிபி நாடுக்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும், அந்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்விக்கு, இது குறித்த தகவலை முதலமைச்சர் அலுவலகத்தில் சேகரித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக #Helpline உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகால உதவி எண்
சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டுள்ளது. இன்று மதியம் 3:20 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து இந்த ரயில் கிளம்பியுள்ளது. அவசர உதவிக்கு 06782262286 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு ரயில்வே 044- 25330952, 044-25330953 & 044-25354771 என்ற அவசரகால உதவி எண்களையும் அளித்துள்ளது.
விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஷாலிமார்-கோரோமண்டல் விரைவு ரயில் இன்று மாலை பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இதில், வெளியூர் சென்ற மக்கள் கடுமையாகப் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் நடந்த விபத்து
இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், 2009ஆம் ஆண்டிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. அதில், 161 பேர் படுகாயமடைந்த நிலையில், 16 பேர் உயிரிழந்தனர்.
ALSO READ | Coromandel Express Accident LIVE: சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்து : உடனடி தகவல்கள் இங்கே..