North Indian Labour: தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை... வடமாநில தொழிலாளர்கள் கேள்விக்கு முதல்வர் பதில்!
உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது, வட மாநில தொழிலாளர்கள் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வடமாநில தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து ஹோட்டல், கட்டிட பணிகள் என அனைத்து இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி வீடியோகளும், செய்திகளும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவியது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கே செல்வதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த தகவல்கள் இந்தியா முழுவதும் வெகுவாக பரவி தீவிரமடைய தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் எதிர்ப்புகளும் கிளம்பியது. இந்த சம்பவங்கள் தொடர்பாக வீடியோ வாயிலாக விளக்கமளித்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, “இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தார். தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு சார்பில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டார்.
இந்தநிலையில், உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது, வட மாநில தொழிலாளர்கள் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்த கேள்விகளும் பதில்களும் இதோ...
கேள்வி: கேள்வி: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதுபோல ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதே?
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், “தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்! அவர்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி ஏராளமானவர்கள் வருகிறார்கள். இவர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சிலர் பொய்யான வீடியோக்களைத் தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகளே இதைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதுதான்! பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை, நான் எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதை கவனித்தீர்கள் என்றாலே, இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும். இந்தச் செய்தி கிடைத்ததும், உடனே எங்காவது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று விசாரித்தேன்.
எந்த இடத்திலும் சிறு தொல்லைகூட ஏற்படவில்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கும் தெரிவித்திருக்கிறேன். தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். தமிழ்நாடும் - தமிழர்களும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' – 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' போன்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். இது இங்கிருக்கும் வட மாநிலச் சகோதரர்களுக்கும் நன்றாகவே தெரியும்” என்று பதிலளித்தார்.