Palani: இந்து அல்லாதவர்களுக்கு பழனி கோயிலில் அனுமதியில்லை - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்களை அனுமதியில்லை என்ற பதாகையை ஆங்காங்கே வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்களை அனுமதியில்லை என்ற பதாகையை ஆங்காங்கே வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பழனியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது.இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது.இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது.இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது.
எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது விசாரணையின் போது இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகை மீண்டும் வைக்க வேண்டும் என தெரிவித்து இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி
விரிவான வாதம் செய்தனர் பின்னர் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர்கள் கோவிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்றும்,
இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும், மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும் என்றும், அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்திரவாதம் “உறுதிமொழி” எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.