Roads Quality : ரூ. 2,178 கோடியில் தரம் உயர்த்தப்படும் 2,000 கி.மீ சாலைகள்.. தமிழக அரசு அதிரடி அரசாணை
ரூ. 2178 கோடி மதிப்பில் 2000 கி.மீ நீளமுள்ள ஊராட்சி சாலைகள் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த அரசாணை வெளியீடு : ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 10 ஆயிரம் கி.மீட்டர் சாலைகளை தேர்வு செய்து மாற்ற முடிவு
ரூ. 2178 கோடி மதிப்பில் 2000 கி.மீ நீளமுள்ள ஊராட்சி சாலைகள் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த அரசாணை வெளியீடு. ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 10 ஆயிரம் கி.மீட்டர் சாலைகளை தேர்வு செய்து மாவட்ட சாலைகளாக மாற்ற முடிவு. 873 ஊராட்சி சாலைகளை ரூ.2178 கோடி மதிப்பில் மாவட்ட சாலைகளாக மாற்றுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு. இந்த அரசாணையில்:
”ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 10,000 கி.மீ நீள சாலைகள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட இதர சாலைகளாக படிப்படியாக தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக 2000 கி.மீ. நீளச் சாலைகள் தரம் உயர்த்தப்படும்
1. மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், அரசாணை (நிலை) எண்.4. நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் (எச்.எப்.1) துறை, நாள் 10.01.2022-ல் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டு ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்டச் சாலைகளாக தரம் உயர்த்திட அளவுகோல்கள் விதிக்கப்பட்டு அதில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்யும் விதமாக 10,000 கி.மீ நீள ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகளை தேர்ந்தெடுக்க கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
2. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் அனைத்து மாவட்டங்களிலும் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துவதற்காக 3435.17 கி.மீ நீளமுள்ள 1535 ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகள் தெரிவு செய்து நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.
3. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்), நெடுஞ்சாலைத் துறை அவர்கள் 2000.312 கிமீ. நீளமுள்ள 873 ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.2178.01 கோடி மதிப்பில் இதர மாவட்டச் சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நிர்வாக ஒப்புதல் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார்.
4. மேலே தலைமைப் பொறியாளர் (நபார்டு (ம) கிராமச் சாலைகள்), நெடுஞ்சாலைத்துறை அவர்களது கருத்துருவானது அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு, அதனை ஏற்று இணைப்பில் கண்டுள்ள 2000.312 கிமீ நீளமுள்ள 873 ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.2178.01 கோடி (ரூபாய் இரண்டாயிரத்து நூற்றி எழுபத்தியெட்டு கோடியே ஒரு இலட்சம் மட்டும்) மதிப்பில் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. மேலும், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள பணிகளில் ஏதேனும் சிறப்பு நிகழ்வாக மாற்றம் செய்ய வேண்டுமெனில், அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் அரசுக்கு தனியே கருத்துரு அனுப்பப்பட வேண்டும்.
6. மேலே பத்தி 5-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட தொகையில், ரூ.600.00 கோடி (ரூபாய் அறுநூறு கோடி மட்டும்) வரவு செலவுத் திட்ட மதிப்பீடு 2022-2023-ல் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும். மேலும், ரூ.250.00 கோடி (ரூபாய் இருநூற்று ஐம்பது கோடி மட்டும்) நடப்பு நிதியாண்டு 2022-2023-ல் மேற்கொள்ளும் பொருட்டு 2022-2023-ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடு / இறுதி திருத்த நிதியொதுக்க மதிப்பீட்டில் (RE, FMA 2022 2023) வழங்கப்படும் என்றும், மீதத் தொகையானது வரவிருக்கும் நிதியாண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஆணையிடப்படுகிறது.
7. மேலே பத்தி 5-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் கீழ்க்காணும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும். 5054 - சாலைகள், பாலங்கள் குறித்த மூலதனச் செலவு - 04 மாவட்டச் சாலைகளும் ஏனைய சாலைகளும் - 337 - சாலைப் பணிகள் - மாநிலச் செலவினங்கள் KD -ஊராட்சி ஒன்றிய சாலைகள் / ஊராட்சி சாலைகள் மேம்படுத்துதல் 416- பெரும் பணிகள் -01 பெரும் பணிகள் (த.தொ.கு.: 5054-04-337-KD-41601)
8. மேலே பத்தி 5ல் ஒப்பளிக்கப்பட்டுள்ள செலவினத்தை மேற்கொள்ள தேவையான கூடுதல் நிதியொதுக்கம் ரூ.250,00,00,000/-, 2022-2023 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடு / இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் (REFMA 2022-2023) வழங்கப்படும். அவ்வாறு வழங்குவதை எதிர்நோக்கி இச்செலவினத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமைப் பொறியாளர் (நபார்டு (ம) கிராமச்சாலைகள்), நெடுஞ்சாலைத்துறை அவர்களுக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகின்றது. மேலும் 2022-2023ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடு / இறுதி திருத்த நிதியொதுக்க (RE/FMA 2022-2023) கருத்துருவை நிதி (பொதுப்பணி-1) துறைக்கு அனுப்பிடும் பொழுது மேற்காணும் செலவினத்தை தவறாமல் அனுப்பிடுமாறு தலைமைப் பொறியாளர் (நபார்டு (ம) கிராமச்சாலைகள்) நெடுஞ்சாலைத்துறை அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார். மேலும் இச்செலவினம் குறித்து சட்டப்பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் பொட்நட்டு 2022-2023-ஆம் ஆண்டின் துணை மதிப்பீட்டில் (Supplementary Estimates 2022-2023) சேர்த்திட இப்பணிக்கான மொத்த நிதியொதுக்கீடு, இந்த நிதியாண்டில் பணிகளின் செயலாக்கத்திற்காக தேவைப்படும் செலவினம் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய விளக்கக் குறிப்பு ஒன்றினை உரிய நேரத்தில் நிதி (பொதுப்பணி-1/ வரவு செலவு பொது-1)த் துறைக்கு அனுப்புமாறு தலைமைப் பொறியாளர் (நபார்டு (ம) கிராமச்சாலைகள்) நெடுஞ்சாலைத்துறை அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
இவ்வரசாணை நிதித்துறையின் இசைவுடன் அத்துறையின் அ.சாகு, எண்.172/ நிதி(பொ.ப.1) துறை /2022 நாள் 18/11/2022-ன்படி மற்றும் கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண். 1821 (ஆயிரத்து எண்ணூற்று இருபத்தொன்று) (IFHRMS ASL No. 2022111821) உடன் வெளியிடப்படுகிறது.