Tamilnadu Cabinet :தமிழக அமைச்சரவையில் புதிய மாற்றம்... பி.டி.ஆருக்கு அமைச்சரவையில் இடம் உள்ளதா? டி.ஆர்.பி ராஜாவுக்கு எந்த துறை?
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம் நடைபெற உள்ள நிலையில், என்னென்ன மாற்றம் நிகழவுள்ளது? யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
![Tamilnadu Cabinet :தமிழக அமைச்சரவையில் புதிய மாற்றம்... பி.டி.ஆருக்கு அமைச்சரவையில் இடம் உள்ளதா? டி.ஆர்.பி ராஜாவுக்கு எந்த துறை? New change in tamil nadu cabinet Does ptr have a place in the cabinet Which department for trb Raja Tamilnadu Cabinet :தமிழக அமைச்சரவையில் புதிய மாற்றம்... பி.டி.ஆருக்கு அமைச்சரவையில் இடம் உள்ளதா? டி.ஆர்.பி ராஜாவுக்கு எந்த துறை?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/aa8bc853978e58aac36883c906bf760c1683704140289333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம் நடைபெற உள்ள நிலையில், என்னென்ன மாற்றம் நிகழவுள்ளது? யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவியேற்ற 2 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது. இந்த முறை டிஆர்பி ராஜாவுக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக டெல்டா மாவட்டங்கள் சார்பாக ஒரு அமைச்சர் கூட இல்லையே என்ற குறை நீங்கிவிட்டது. இன்னொரு முக்கிய மாற்றமாக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா நாளை அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் இந்த முறை அமைச்சரவையில் மிக முக்கிய மாற்றங்கள் நடக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை மற்றும் முதலீடு ஊக்குவிப்பு துறை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் மிக முக்கிய துறைகளில் ஒன்று தொழில்துறை. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 2031ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று பேசியிருந்தார் முதலமைச்சர். இவை அனைத்தையும் பார்த்துக் கொள்ளக் கூடிய வலுவான துறைதான் டிஆர்பி ராஜாவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது என கூறப்படுகிறது.
ஒருவேளை டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்படவில்லை என்றால் அதற்கு பதிலாக தகவல் தொழில்நுட்பத் துறை அல்லது செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை வழங்கப்படலாம் என்றும் அதற்கான ஆலோசனைகளும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில், ஆடு, மாடுகள் அதிகம் வளர்க்கப்படும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவராக ராஜா இருப்பதாலும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்த துறையான பால்வளத்துறை அவருக்கு அப்படியே மாற்றித் தரப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
தொழில்துறை டி.ஆர்.பி. ராஜாவுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ மாற்றப்பாட்டால் தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு நிதித்துறைக்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி அரசு முறை பயணமாக செல்லவுள்ள நிலையில் அதற்கான முழு ஏற்பாட்டையும் தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவே செய்துள்ளார். அதோடு, விரைவில் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டு மாநாடும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், திடீரென தொழில்துறையை பிடிஆருக்கோ அல்லது மற்றவருக்கோ மாற்றிக் கொடுப்பது தற்போதைக்கு சரியாக இருக்காது என விவாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த மாற்றம் நடக்குமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.
அப்படி இது நடக்கும் பட்சத்தில் அமைச்சரவை மாற்றத்தில் பரபரப்பாக பேசப்படப் போகும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும். நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் திமுகவில் புயலை கிளப்பிய நிலையில், அதற்காகதான் பிடிஆருக்கு எதிராக தலைமை இந்த முடிவை எடுத்ததா என்ற கேள்வி திமுகவில் எழும். பிடிஆரின் ஆடியோவை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்டு வரும் நேரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதித்துறையை பிடிஆரின் கைகளில் இருந்து பறித்தால் அது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதே நேரத்தில் இந்த விவகாரம் பல இடங்களில் விவாத பொருளான நிலையில், நிதித்துறைக்கு பதிலாக பிடிஆருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட இருப்பதாகவும் அதனால் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜிடம் பால்வளத்துறையை ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டும் சமூக வலைதளங்களில் இந்த விஷயங்கள் பகிரப்பட்டும் வருகிறது.
ஆனால், எந்தெந்த துறை யார் யாரிடம் ஒப்படைக்கப்படப் போகிறது, இந்த மாற்றம் திமுகவில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது நாளை தெரிந்துவிடும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)