Nellai Oxygen Issue: நெல்லை அரசு மருத்துவமனையில் 13 பேர் உயிரிழப்பு; ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என குற்றச்சாட்டு
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. டெல்லி, தமிழ்நாடு, கர்நாடக போன்ற மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை ஆக்ஸிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதால் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, இ.எஸ் ஐ மருத்துவமனை மற்றும் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இருந்து சிறிய அளவிலான ஆக்சிஜன் சிலிண்டர் வரவழைக்கப்பட்டு தற்காலிகமாக ஆக்சிஜன் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு ஐஎஸ்ஆர்ஓ விலிருந்து கொண்டுவரப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் சேமிப்பு கலனில் நிரப்பப்பட்டு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பகுதியிலிருந்து ஆறு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனுடன் வாகனம் நெல்லை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் 800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உள்ளது அவை முழுவதும் நோயாளிகளால் நிரம்பியுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் என தினமும் 40க்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்று மாலை ஆக்சிஜன் இருப்பு குறைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக சிகிச்சையிலிருந்த நோயாளிகள் 13 பேர் ஆக்சிஜன் இன்றி பரிதாபமாக இறந்ததாக தகவல் வெளியானது. இறந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். மாற்று இடங்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்காத நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியது. கண்காணிப்புக் குழு தலைவரும், தூத்துக்குடி ஆட்சியருமான செந்தில்ராஜ் அதற்கான ஏற்பாட்டை செய்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக ஆக்சிஜன் தேவை என்ற அடிப்படையில் இந்த மருத்துவமனைக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக 5 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு 5 கிலோ லிட்டர் உற்பத்தி செய்யப்படும். அதன்பிறகு 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தேவைக்கேற்ப தமிழ்நாடு மருத்துவ கழகம் வழிகாட்டுதலில் அனுப்பப்படும்” என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார். அதே நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் இறக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அண்டை மாவட்டங்களில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் கொரோனா நோயாளிகள் சென்னை வருகின்றனர். இதனால், இங்கு ஆம்புலன்ஸ்கள் வரிசையில் நிற்கின்றன. கோவை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியுள்ளன. சேலம், தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இல்லை. கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம். தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே ஐசியூ படுக்கைகள் உள்ளன.
நேற்றுமுன் தினம் திருப்பதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.