NEET OBC Reservations: 27% ஓபிசி இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி
அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் ஆகும்.
அகில இந்திய தொகுப்பில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு நடப்பாண்டுக்கு மட்டும் செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ள உச்சநீதிமன்றம், 27% ஓபிசி இட ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்று என்றும், 10% இட ஒதுக்கீட்டின் செல்லுபடியாகும் தன்மை குறித்து மார்ச் மாதத்தில் விரிவான விசாரணை நடத்தப் படும் என்றும் கூறியுள்ளது. ஓபிசி இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.
அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் ஆகும். இதன்மூலம் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு அசைக்க முடியாத அளவுக்கு வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சமூக நீதி பயணத்தை தொடங்கி வழிநடத்தியது பா.ம.க. என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தியா விடுதலையடைந்து 40 ஆண்டுகள் வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதி வழங்கப்படவில்லை. விடுதலைக்குப் பின் 44 ஆண்டுகள் கழித்து 1990-ஆவது ஆண்டில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான அரசு, மண்டல் ஆணையத்தின் பரிந்துரையில் ஒரு பகுதியை மட்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மட்டும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்பின்னர் 16 ஆண்டுகள் கடந்த பின்னரும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு என்பது எட்டவே எட்டாத கனியாகவே இருந்து வந்தது.
2004-ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு அதை வழிநடத்துவதற்காக உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் உயர்கல்வியில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற பிரிவை சேர்க்கச் செய்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதன்பின் இரு ஆண்டுகள் ஆகியும் உயர்கல்வியில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் கொதித்தெழுந்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், 2006-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள் தில்லியில் சோனியா காந்தி அம்மையார் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் போக்குரல் உயர்த்தியதன் பயனாகவே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. அதை சாத்தியமாக்கிய பெருமை முழுக்க முழுக்க மருத்துவர் அய்யா அவர்களையே சாரும்.
அதைத்தொடர்ந்து 1986-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டு வந்த சமூகநீதியை பெற்றுத் தந்தது நான் தான். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பணியாற்றிய காலத்தில், மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று, மருத்துவப்படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியின மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க 2007-ஆம் ஆண்டில் நான் தான் ஆணையிட்டிருந்தேன். அந்த நேரத்தில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருந்தால் அப்போதே அதை அகில இந்திய தொகுப்பிலும் நடைமுறைபடுத்தியிருந்திருப்பேன். அகில இந்திய தொகுப்பில் ஓபிசிகளுக்கு இப்போது கிடைத்த சமூகநீதி 14 ஆண்டுகளுக்கு முன்பே சாத்தியமாகியிருக்கும். இவ்வாறாக ஓபிசி வகுப்புக்கான சமூகநீதியை போராடி வென்றெடுத்து வருவதில் பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த பெருமிதம் கொள்கிறது.
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்கான சட்டப்போராட்டத்தை 2020-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் முதன்முதலில் வழக்கு தொடர்ந்து தொடங்கி வைத்ததும் நான் தான். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நானும் பிற கட்சிகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்த வழக்கில் தான் அகில இந்திய தொகுப்பில் ஓபிசிகளுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் 27% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இது சந்தேகமே இல்லாமல் சமூகநீதிக்கும், அதற்காக பாடுபட்ட இயக்கங்களுக்கும் கிடைத்த வெற்றி.
சமூகநீதிக்கான பயணம் மிக நீண்டது. அதற்காக நாம் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் அதிகம். கடந்த காலங்களில் யார், யாருக்கெல்லாம் சமூகநீதி மறுக்கப்பட்டதோ, அவர்கள் அனைவருக்கும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சமூகநீதியை வென்றெடுத்துத் தருவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப் போராட்டங்களும், அரசியல் போராட்டங்களும் ஏராளமாக உள்ளன. அந்தப் போராட்டங்களை முன்னெடுத்து அனைத்து சமூகத்தினருக்கும் சமூகநீதி கிடைப்பதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்.