Namakkal Accident: நாமக்கல் பட்டாசு விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை..! எப்படி..?
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு - சிலிண்டர் வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தில்லை குமார் என்பவர், பட்டாசு விற்பனை கடை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், கோயில் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசு விற்பனை செய்யும் வகையில் அதிகளவு பட்டாசை வாங்கியிருக்கிறார். மேலும் அதிகளவு பட்டாசுகளை, நேற்று எடுத்து வந்து வீட்டில் பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.
பட்டாசு - சிலிண்டர் விபத்து:
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் விபத்தில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. அதனையடுத்து, வீட்டில் இருந்த சிலிண்டரும் தீப்பற்றி வெடித்ததாக கூறப்படுகிறது.
பட்டாசு வெடிப்பு மற்றும் சிலிண்டர் வெடிப்புகளால், பெரும் உயரத்துக்கு தீயானது சென்றது. மேலும், அருகிலிருந்த 100 மீட்டர் சுற்றளவில் இருந்த 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் இடிந்து சேதமானது
4 பேர் உயிரிழப்பு:
இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தில்லைக்குமார் தூக்கி வீசப்பட்டு உயிர் இழந்தார், அவரது வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிய அவரது மனைவி பிரியங்கா, தாய் செல்வி சுவர் இடிபாடுகளில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்து நடந்த வீட்டின் அருகில் வசித்து வந்த பெரியக்காள் என்ற மூதாட்டியும் உடல் சிதறி உயிரிழந்தார்.
உயிர் பிழைத்த குழந்தை:
பட்டாசு கடையில் விற்பனை செய்யும் இளைஞரும், தில்லைகுமார் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டவுடன், தில்லைகுமாரின் 5 வயது குழந்தையை இளைஞர் தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால், லேசான தீக்காயத்துடன் இருவரும் தப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வந்த 11 பேர் காயமடைந்து நாமக்கல் மற்றும் மோகனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ அணைப்பு:
மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல், கரூர் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் அதிக அளவு நாட்டு வெடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் நாமக்கல் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நிதியுதவி அறிவிப்பு:
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, ரூ. 2 லட்சம் நிதியுதவியும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.