என்ஜினியரை லெப்ட் ரைட் வாங்கிய நாமக்கல் கலெக்டர்! கையெடுத்து கும்பிட்ட மக்கள்!
நாமக்கல் நரசிம்மர் கோயில் பணியாளர்கள் குடியிருப்பு கட்டிட பூமி பூஜையில் பொறியாளரை மாவட்ட ஆட்சியர் உமா கடுமையாக எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற நரசிம்மர் கோயில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோயிலின் பணியாளர்கள் தங்குவதற்கான புதிய கட்டிடத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
பூமி பூஜையில் பரபரப்பு:
இந்த பூமி பூஜையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதியதாக கட்டப்படும் கட்டிடத்தால் அந்த கட்டிடத்தின் பின்பகுதியில் வசிக்கும் 33 குடும்பங்களுக்கான பாதை அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் வேதனையில் இருந்தனர்.
இந்த நிலையில், பூமி பூஜையில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதைக்கேட்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது, அவர் இந்த கட்டிட பணிகளுக்காக பொறியாளரை அழைத்து எச்சரித்தார். மேலும், அவரிடம்,
லெஃப்ட் ரைட் வாங்கிய கலெக்டர்:
யாரு இந்த மேப் போட்ட என்ஜினியர் யாரு? முதலில் இந்த பகுதியில் ஏன் கை வைத்தீர்கள்? மக்கள் இத்தனை வருஷமா வந்துட்டு, போயிட்டு இருக்காங்க. ரோடாதான் வைக்கனும் அதை. ஒன்னும் பிரச்சினை கிடையாது. அது ரோடாதான் இருக்கனும். அதை அடைச்சுட்டு எல்லாம் கட்ட முடியாது. அவங்களுக்கு எப்படி வழி இருக்கும்? பின்னாடிதான் இவ்வளவு இடம் இருக்குதுல. இவங்க எப்படி போவாங்க?
33 குடும்பங்கள் இருக்குது. 2000-த்துல நாமதான் பட்டா கொடுத்துருக்கோம். நீங்க 10 மீட்டர் அளப்பீங்களோ, 20 மீட்டர் அளப்பீங்களோ. இதுக்கு பின்னாடி கட்டிக்கோங்க. இந்த இடம் ரோடாதான் இருக்கனும். அநாவசியமா சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது. இந்த சாலையை இந்த நிதியிலே போட்டுக்கொடுங்க என்று அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களிடம் அரசாங்கம் மக்களுக்காகத்தான் இருக்கும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.
பொதுமக்கள் நெகிழ்ச்சி:
மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்த பிறகு அப்பகுதி மக்கள் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மிகுந்த நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். மேலும், ஊர் மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியருக்கு கடன்பட்டிருப்பதாக தெரிவித்தார். நாமக்கல் நரசிம்மர் கோயில் 8ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள அனுமன் சக்திவாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. இந்த கோயிலில் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் காணப்படுவார்கள். இந்த கோயிலின் பணியாளர்கள் தங்கும் வசதிக்காக கட்டும் கட்டிடத்தின் பணிகளில் ஏற்பட்ட குழப்பம் தற்போது அது நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதும் மக்களுக்கும், பக்தர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

