Rajiv Gandhi Assassination Case : ராஜீவ்காந்தி கொலை வழக்கு : விடுவிக்கக்கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி
உச்சநீதிமன்றம்போல் விடுவிப்பதற்கு உத்தரவிடும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும் இந்த மனு குறித்த விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், இருவரின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் போல் விடுவிப்பதற்கு உத்தரவிடும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும் இந்த மனு குறித்த விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி இருவரின் தரப்பில் இருந்தும் உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ள தலைமை நீதிபதி அமர்வு, உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அரசியல் சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தது போல் தங்களால் விடுவிக்க முடியாது என்று கூறி இருவரது மனுவையும் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறினர். முன்னதாக பேரறிவாளன் வழக்கை முன் வைத்து வாதிட விரும்பினால், இந்த வழக்கை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை, நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்