ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? ஜூன் 25-க்குள் இதை செய்யாட்டி சிக்கல்..
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜூன் 25-க்குள் குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவை (Biometric Authentication) வரும் ஜூன் மாதம் 25-ஆம் தேதிக்குள் தங்களுக்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மேற்கொண்டு, தங்களது உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், அவசர மற்றும் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றியும், தகுதியான நபர்களுக்கு முறையான வகையிலும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
விரல் ரேகை பதிவு ஏன் கட்டாயம்?
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் (Smart Ration Cards) பயன்படுத்தி பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் முழுமையாகக் கிடைக்கவும் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விவரங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டை உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பல குடும்ப அட்டைகளில் சில உறுப்பினர்கள் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விடுபட்ட உறுப்பினர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும்.
வெளிமாவட்டங்களில் வசிப்போருக்கு சிறப்பு ஏற்பாடு
குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள சில உறுப்பினர்கள், கல்வி, வேலைவாய்ப்பு அல்லது தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை விடுத்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலோ அல்லது வேறு பகுதிகளிலோ தற்காலிகமாக வசித்து வரலாம். அவர்கள் இந்த நடைமுறைக்காகத் தங்களது சொந்த ஊருக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
அவர்கள் தற்போது எந்தப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகிறார்களோ, அந்தப் பகுதிக்கு மிக அருகில் உள்ள ஏதேனும் ஒரு நியாயவிலைக் கடைக்கு (Ration Shop) நேரடியாகச் சென்று, அங்குள்ள கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி மூலம் தங்களது பயோமெட்ரிக் விவரங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் தங்களது குடும்ப அட்டையின் உரிமையையும், அரசுப் பொருட்களையும் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்துகொள்ள முடியும்.
இறந்தவர்களின் பெயர்களை நீக்கக் காலக்கெடு
பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக, குடும்ப அட்டையில் பெயர் இருந்து, தற்போது உயிரிழந்த நபர்களின் விவரங்களை அட்டையிலிருந்து நீக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
"குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தரமாகப் பிரிந்து சென்றுவிட்டாலோ, அவர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்குவது சட்டப்படி குற்றமாகும். எனவே, இறந்த உறுப்பினர்களின் பெயர்களை வரும் 25.06.2026-க்குள் குடும்ப அட்டையிலிருந்து முழுமையாக நீக்கம் செய்ய வேண்டும்." என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெயர்களை நீக்கம் செய்ய வேண்டிய நடைமுறைகள்
இறந்தவர்களின் பெயர்களைக் குடும்ப அட்டையிலிருந்து நீக்கம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் இரு வழிகளைப் பொதுமக்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
வட்ட வழங்கல் அலுவலகம் (Taluk Supply Office):
பொதுமக்கள் தங்களுக்குரிய வட்ட வழங்கல் அலுவலகத்தை நேரடியாக அணுகி, இறந்த நபரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, வரும் 25.06.2026-க்குள் பெயர்களை ஆன்லைன் மூலமாக நீக்கம் செய்து கொள்ளலாம்.
நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் ஒப்படைத்தல்
வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் செல்ல இயலாத பொதுமக்கள், தங்களது பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் (Ration Shop Salesperson) இதற்கான ஆவணங்களை வழங்கலாம். இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண் மற்றும் அவரது அடையாள அட்டை நகலினை (உரிமையாளரால் சான்றொப்பமிடப்பட்ட நகல்) விற்பனையாளரிடம் நேரடியாக ஒப்படைத்து, பெயர்களை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள்
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானிய விலையிலான பொருட்கள் உண்மையான ஏழை எளிய மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யப் பொதுமக்கள் அனைவரும் இந்தத் தூய்மைப்படுத்தும் பணிக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
குறிப்பிடப்பட்ட ஜூன் 25-ஆம் தேதிக்குப் பிறகு, கைவிரல் ரேகை பதிவு செய்யப்படாத உறுப்பினர்கள் மற்றும் முறையற்ற வகையில் நீக்கப்படாமல் உள்ள இறந்தவர்களின் பெயர்கள் குறித்து தீவிரத் தணிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, எவ்விதக் குறைபாடுகளுமின்றி தங்களது குடும்ப அட்டை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கவும், தடையின்றிப் பொருட்கள் கிடைக்கவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இந்தக் காலக்கெடுவிற்குள் (25.06.2026) நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் அனைவரும் இந்த நடைமுறைகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தனது செய்திக்குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்























