மேலும் அறிய

’பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது..மேம்போக்காக உள்ளது!’ - சீமான் விமர்சனம்

பொருளாதார முடக்கத்திற்கான தீர்வுகளையும், மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிகளையும் முன்வைக்காது மேம்போக்காகவும், தன்முரண்களோடும் அமைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொலைநோக்குப் பார்வையில்லாத மேம்போக்கான அறிக்கை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.அரசின் நிதிநிலை அறிக்கை தொலைநோக்குப்பார்வையோடு பரந்துபட்ட நோக்கத்தோடு முன்வைக்கப்படாது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததினால் எழும் எதிர்மறை விமர்சனங்களைத் தணிப்பதற்காகவும், வெளித்தோற்ற அரசியல் மூலம் விளையும் இலாபக்கணக்கீடுகளுக்காகவுமே இயற்றப்பட்டதாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது நிதியாதாரப் பற்றாக்குறையினால் நிலவும் அரசின் பொருளாதார முடக்கத்திற்கான தீர்வுகளையும், மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிகளையும் முன்வைக்காது மேம்போக்காகவும், தன்முரண்களோடும் அமைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.

அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையானப் பொருளாதார நிலையறிய எல்லாத்துறைகளிலுமுள்ள தரவுகளை ஒன்றிணைக்க முயற்சியெடுக்கப்படும் எனக் கூறுகிறது நிதிநிலை அறிக்கை . இப்போதுதான், மக்களின் பொருளாதார வாழ்நிலையையே அறியப் போகிறார்களென்றால், எதனடிப்படையில் வாக்குறுதிகளை அள்ளி வீசியது திமுக? என்பது புரியவில்லை. கூட்டாட்சி நிதிவடிவம் ஒன்றை உருவாக்குவதற்கு வருவாய் மற்றும் வரிவிதிப்பு தொடர்புடைய சட்டப்பொருளாதார நிபுணர்களைக் கொண்டு ஆலோசனைக்குழு நிறுவப்படும் என அறிவிக்கிறது நிதிநிலை அறிக்கை. ரகுராம் ராஜன் போன்ற உலகப்புகழ் பெற்றப் பொருளாதார ஆலோசகர்களைக் கொண்ட குழு ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கையில், இன்னும் பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனைகளையும் வழங்கவும், வழிநடத்தலை செய்யவுமிருக்கையில், மறுபடியும் ஒரு குழு அமைப்பதன் நோக்கமென்ன? முந்தைய அதிமுக அரசு பின்பற்றிய அதே பொருளாதாரக்கொள்கையையே அச்சுப்பிசகாது பின்பற்றிக்கொண்டு, மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் ஆராயாத திமுக அரசு, வெறுமனே பொருளாதார நிபுணர்களின் குழுக்களை அமைத்து, காலந்தாழ்த்திக்கொண்டே போவது ஏனென்று தெரியவில்லை. ஏற்கனவே, தமிழகத்தின் பொருளாதாரத்தை வரிகளின் மூலம் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, சுரண்டி சூறையாடிக் கொண்டிருக்கிற சூழலில் எப்போது குழுவின் மூலம் வழிகாட்டுமுறைகளைப் பெற்று, பாஜக அரசிடம் வாதிட்டு நிதியுரிமையை நிலைநாட்டப்போகிறார்கள்? அவ்வளவு நீண்டக்காலநேரம் இருக்கிறதா? நிலம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக துல்லியமான புவி இடங்காட்டி மற்றும் ஏனையத் தொழில்நுட்பங்களைக் கொண்டு மாநிலம் முழுவதும் நில ஆய்வை மேற்கொள்ளும் எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்தகைய ஆய்வை மேற்கொண்டு அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்தான செயல்திட்டமும், தெளிவான விளக்கமும் இல்லையே! நவீனத் தொழில்நுட்பங்களான ஆளில்லா விமானங்கள் மூலம் ஆய்வுசெய்ய 30 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு நீர்வளத்தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆய்வு மட்டும் செய்து என்ன பயன்? நீர்மேலாண்மையை சீர்செய்ய வலுவான திட்டங்கள் இல்லையே! திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ஏரி, குளங்களின் சீரமைப்புக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிதிநிலை அறிக்கையில் வெறும் 111 கோடி செலவில் 200 குளங்கள் பராமரிக்கப்படும்; 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும் என அறிவித்திருப்பது வியப்பளிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையே 6 மாதத்திற்கானதுதான். மொத்த ஆட்சியே 5 ஆண்டுகாலம்தான் எனும்போது பத்தாண்டைக் காலக்கெடாக முன்வைப்பது ஏற்புடையதுதானா?

மீன்வளத்துறையில் மீன்பிடித்துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குத்தளங்களை அமைக்க 433.97 கோடி ரூபாயும், மீன் இறங்குத்தளங்களை மேம்படுத்த 143 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக மீன்பிடித்துறைமுகங்களை எங்கு அமைக்கப்போகிறார்கள் என்பது குறித்தும், அதற்கான செயல்திட்ட விபரங்கள் குறித்தும் எவ்விதத் தெளிவான விளக்கமும் இல்லை. ஒட்டுமொத்த மீனவ்ர்களின் நலன்களுக்காக 1149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடித்தடைக்காலங்களில் 60 நாட்களுக்கு ஒரு குடும்பத்திற்குத் தலா 5000 ரூபாய் வீதம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. பணவீக்கமும், விலைவாசியுயர்வும் உச்சத்திலிருக்கும் தற்காலத்தில் அத்தகைய சொற்பத்தொகையைக் கொண்டு அக்குடும்பங்கள் எவ்வாறு வாழும்? எனக் கேள்வியெழுப்பி, அத்தொகையை உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கை நீண்டநாட்களாக மீனவ மக்கள் மத்தியில் இருக்கையில், அதனை உயர்த்தித் தருவது தொடர்பான எவ்வித அறிவிப்புமில்லை.

பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்காக 5,00 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பருவநிலையைக் காக்க பல நூறு கோடிகளை ஒதுக்கீடு செய்யும் அதேவேளையில், புதைபடிமப் பொருட்களையும், கனிம வளங்களையும் எடுக்க தனிக்கொள்கை வடிவமைத்திருப்பது தன்முரண்பாடு இல்லையா? காலநிலைக்கும், சூழலுக்கும் ஏற்ற வகையில் கட்டுமானம் மாறுவது அவசியமெனக் குறிப்பிடப்பட்டிருக்கும் அதேநேரத்தில், அமைப்புசாராத் தொழிலாளர்களாக விளங்கும் கட்டுமானத்தொழிலாளர்களின் நலன் குறித்தும், அத்துறையைச் சார்ந்த உழைக்கும் மக்களின் மேம்பாடு குறித்தும் எதுவும் கூறப்படவில்லை என்பது அரசின் பொத்தாம் பொதுவான மேம்போக்கான பார்வையையே காட்டுகிறது. ஊரக வளர்ச்சியில், வீடு கட்டுவதற்கான அரசு மானியம் 2.34 இலட்சமாக உயர்த்தப்பட்டு, திட்டச்செலவு 3458 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பேரிடரும், பொருளாதார முடக்கமும் நெருக்கியடிக்கிற சூழலில் அத்தியாவசியத்தேவைகளையும், அன்றாடச்செலவுகளையுமே எதிர்கொள்ள முடியாது மக்கள் திணறுகையில், அதற்கான தீர்வுகளில் கவனம் செலுத்தாது இதுபோன்ற நீண்டகாலத்திட்டங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்வது ஏனென்று புரியவில்லை.

2021–22 ஆண்டுக்கான மதிப்பீடுகளில் சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு முன்வைக்கும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்காக மாநில அரசு அதற்காக எதற்கு நிதியை ஒதுக்குகிறது? கிராமப்பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் பாஜக அரசின் நகரங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட திட்டத்திற்காக நிதியை இரையாக்குவது ஏனென்று விளங்கவில்லை. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்களில், நீர்வழித்தடங்களைப் பராமரிப்பது, வடிகால்களை சீரமைப்பதென நகருக்குள் நீர்தேங்கி வெள்ளம் ஏற்படும் பேராபத்தைத் தீர்க்க எதுவும் அறிவிக்கப்படவில்லை. சிங்காரச்சென்னை திட்டம் 2.0 தொடங்கப்படும்; சென்னை நகரில் மூன்று இடங்களில் 335 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. சாலைக்கு மேலே செல்லும் போக்குவரத்து குறித்துத் திட்டங்கள் தீட்டப்படும் வேளையில், சாலைக்குக் கீழே ஓடும் நீர் தங்குதடையின்றி செல்ல ஏதுவாக கால்வாய்களும், வாய்க்கால்களும் பராமரிப்பு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தோ, ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கிற கழிவுநீரை மேலாண்மையைப் பின்பற்றி, அவற்றை மறுசுழற்சி செய்வது குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.

போக்குவரத்துப்பயணத்திற்கு 703 கோடி மானியமும், 750 கோடி டீசல் மானியமும், 623 கோடி ரூபாயில் ஜெர்மனி நாட்டு வங்கியின் கடனுதவியுடன் 1,000 புதியப்பேருந்துகளை வாங்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அரசுப்பேருந்து இயக்கத்தால் ஒரு கிலோமீட்டருக்கு 59 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என அரசே கூறிவரும் நிலையில், அதனைச் சரிசெய்ய முன்னெடுப்புகளைச் செய்யாது ஜெர்மன் நாட்டு வங்கியின் உதவியுடன் புதிதாகப் பேருந்துகளை வாங்க வேண்டிய அவசியமென்ன? அடுத்தப் பத்தாண்டுகளில் சொந்த மின்உற்பத்தி நிலையங்களின் வாயிலாக, மாநிலத்தில் 17,980 மெகா மின் உற்பத்தி கூடுதலாகச் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பத்தாண்டு ஆண்டுகாலம் எனும் நீண்ட செயல்திட்டத்தில் இதனை செயல்படுத்துவது சாத்தியம்தானா? எனும் கேள்வியெழும் அதே வேளையில், காலநிலை மாற்றத்தைப் பாதிக்காத மாற்று மின்னுற்பத்தி குறித்து எவ்வித விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிக்கத்தக்கது. கல்வியாளர்களைக் கொண்டு மாநிலக்கல்விக்கொள்கை என்றவொன்றை உருவாக்கும் எனக்கூறும் வேளையில், நீட் தேர்வு போன்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு குறித்து எவ்விதக் குறிப்பும் அதில் இடம்பெறவில்லை என்பதும், கல்விக்கொள்கையில் ஒன்றிய அரசு தொடர்ச்சியாக திணிப்புகளைச் செய்துவரும் வேளையில் அதனை எவ்வாறு முறியடிக்கப்போகிறார்கள் என்பதும் இதன் சாத்தியக்கூறுகளை நோக்கிக்கேள்விகளை எழுப்புகிறது. பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனக் கறியிருக்கும் வேளையில், கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டதைவிட ஏறக்குறைய 8,000 கோடி ரூபாய் குறைத்து, 32,599 ரூபாயாக அதற்கான தொகையை மாற்றியமைத்து ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்பதன் மூலம் அத்துறைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் நலிவுநிலையிலிருக்கும் சூழலில், மாற்றுப்பொருளாதாரப்பெருக்கத்திற்கான வழிகளைத் தேட வேண்டிய நிலையில், எண்ணற்ற சுற்றுலாத்தளங்களைக் கொண்ட இந்நிலத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க 187 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதில்லை. குடும்ப அட்டைகளைக் கொண்டிருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் வழங்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திமுக, தற்போது இத்திட்டத்தை மிகவும் வறுமை நிலையிலிருக்கும் மக்களுக்கானத் திட்டமென சுருக்கி அறிவித்து, தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனப் பின்வாங்குகிறது. அந்தத் தகுதியை எதனடிப்படையில் நிர்ணயம் செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதிகச்செலவினங்களைக் கொண்ட எண்ணற்றத் திட்டங்களை முன்வைத்திருக்கிற இந்நிதிநிலை அறிக்கையில் வருவாய்க்கான வழிவகைகளைப் பற்றித் தெளிவாக எதுவும் குறிப்படவில்லை. மரபுசார்ந்த வருவாயான மாநில அரசின் நிதி வருவாய், ஒன்றிய அரசு வழங்கும் நிதிப்பங்கீடு, வரி அல்லாத மாநில அரசின் வருவாய்கள் குறித்து மட்டுமே நிதிநிலை அறிக்கை கூறுகிறதே ஒழிய, புதிய வருவாய்க்கான வாய்ப்புகளைக் கூறவில்லை. பெட்ரோல் விலையை சற்று குறைத்திருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், டீசல் விலையையும் குறைத்திருக்கலாம் என்பது மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது. தனிநபர் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படும் பெட்ரோல் விலையைக் குறைத்தது போல, டீசல் விலையைக் குறைந்திருந்தால் அத்தியாவசியப்பொருட்களைச் சுமந்துசெல்லும் பாறையுந்து போன்றவற்றின் வாடகைச்செலவால் உயரும் விலைவாசி உயர்வைக் கொஞ்சமேனும் மட்டுப்படுத்தி, வாகனங்களைப் பயன்படுத்தாத எல்லாத்தரப்பு மக்களையும் பயனடையச்செய்திருக்கலாம். அதனை ஏனோ செய்யத் தவறிவிட்டார்கள். அரசின் பல்வேறு துறைசார்ந்த பணியாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகள் குறித்தும் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனைத் தள்ளுபடி செய்திருப்பது போன்ற வரவேற்கக்கூடிய சிற்சில அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் மூலமான வருவாய் ஆதாரம் கேள்விக்குறியாக இருப்பதும், மதுபானக்கடை வருமானத்தை நம்பி நிற்கும் அரசின் இழிநிலையும் கவலையைத் தருகிறது.

மொத்தத்தில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது தொலைநோக்குப்பார்வையோடு பரந்துபட்ட நோக்கத்தோடு முன்வைக்கப்படாது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததினால் எழும் எதிர்மறை விமர்சனங்களைத் தணிப்பதற்காகவும், வெளித்தோற்ற அரசியல் மூலம் விளையும் இலாபக்கணக்கீடுகளுக்காகவுமே இயற்றப்பட்டதாக இருக்கிறது எனப் பகுப்பாய்வு மூலம் மதிப்பீடு செய்கிறேன்!’ என விமர்சித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget