Book Fair: சேலம் புத்தக கண்காட்சி: தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு
புத்தக கண்காட்சியில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 பதிப்பகங்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் சேலம் புத்தகத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.
புத்தக கண்காட்சி:
இந்த புத்தக கண்காட்சியில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 பதிப்பகங்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சி இன்று துவங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி கலை பண்பாடு கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சிக்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கேயே அமர்ந்து புத்தகங்கள் வாசித்து பயன்பெறும் வகையில் வாசிப்பு அரங்குகளும் ஒலி ஒளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் முதல் முதலில் புத்தக கண்காட்சியை நடத்தியவர் கலைஞர் என்றும் தற்போதைய தமிழக முதலமைச்சர் அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருக்கும் போது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயதுகளிலும் நூலகம் அமைத்திட உத்தரவு பிறப்பித்தார் என்றும், இது தவிர விழாக்களில் தனக்கு பொன்னாடைக்கு பதிலாக புத்தகங்கள் கொடுக்க உத்தரவு பிறப்பித்து அந்த புத்தகங்களை தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு வழங்கி வருகிறார் என்றும் இதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்தில் முதல் முறையாக உலக அளவிலான புத்தக கண்காட்சியை நடத்திட ஜனவரி மாதம் நடத்திட உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றும், முத்தமிழ் அறிஞர் துவக்கி வைத்த புத்தக திருவிழாவை தமிழகம் முழுவதும் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றும், இந்த புத்தக திருவிழாவை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
தொடர்ந்து விழாவில் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வைரவன் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடத்திட சுமார் 5.6 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி உள்ளதாகவும் இது தவிர இந்தியாவில் முதல் முறையாக உலக அளவிலான புத்தக கண்காட்சி நடத்திட உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வரின் உத்தரவிற்கு இணங்க வருகின்ற ஜனவரி மாதம் தமிழகத்தில் முதல் முறையாக உலக அளவிலான புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாகவும் புத்தக வாசிப்பை அனைவரிடமும் கொண்டு செல்லும் தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் பேசினார்.
அமைச்சர் ஆய்வு:
புத்தகக் கண்காட்சியை பார்க்க வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்னென்ன ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் இந்த புத்தக கண்காட்சியை முன்னிட்டு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ள இந்த பகுதி சைலன்ட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நான்கு ரோடு சந்திப்பு முதல் ஐந்து ரோடு சந்திப்பு வரை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒலி எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. நமது மாவட்ட உத்தரவை மீறி வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட இப்பகுதியில் ஒளியை எழுப்பினால் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.