“உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய செவிலியர்களை அரசு வஞ்சிக்கிறது” - போராட்டத்தில் பிரேமலதா பேச்சு
”செவிலியர்கள் PPE கிட்டை ஒரு நாள் முழுவதும் அணிந்து சிரமப்பட்டு கோவிட் பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றிய தெய்வங்கள், அவர்களை தமிழ்நாடு அரசு வஞ்சிக்கிறது” - பிரேமலதா விஜயகாந்த்
எம்.ஆர்.பி செவிலியர்களை பணியில் இருந்து விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை எழும்பூரில் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தருவதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செவிலியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேசியதாவது, ”கொரோனா காலத்தில் தன் உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றிய செவிலியர்களை ஆளுகின்ற தமிழ்நாடு அரசு வஞ்சிக்கிறது. செவிலியர்கள் நடமாடும் தேவதைகள். அவர்களுடைய உழைப்பை இந்த உலகமே கண்டு வியக்கிறது.
செவிலியர்கள் PPE கிட்டை ஒரு நாள் முழுவதும் அணிந்து சிரமப்பட்டு கோவிட் பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றிய தெய்வங்கள். தமிழ்நாடு அரசு ஊழல் செய்வதற்கும் லஞ்சம் பெறுவதற்கு மட்டும் நிதி இருக்கிறது. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய மட்டும் நிதி இல்லை என்றால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இதை தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.
இந்தப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்கலாம் என ஆளுநர் கூறியது குறித்து முன்னதாக எதிர்வினையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், ”தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் ஏதோ ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதினால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்? இந்தக் கருத்துக்கு தே.மு.தி.க., தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
மக்கள் ஐடி எடுப்பது என்பது மக்களிடம் கருத்துக் கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஆதார் ஐடி மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்று அடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐடி என்பது தேவையில்லை.
முதலில் வெளிமாநிலத்தால் எத்தனை நபர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐடி எடுத்தால் என்ன ஆவது? எனவே இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் மக்களிடம் கருத்து கேட்டு தான் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது உள்கட்சி தேர்தல் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. முடிந்தவுடன் செயற்குழு கூட்டப்பட இருக்கிறது. வருத்தப்படாதீர்கள். தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி குறித்து தலைவர் அவர்கள் தலைமைக் கழகத்தில் அறிவிப்பார்” என்றும் தெரிவித்தார்.