அரசியல் வன்மம்.. நயினார் நாகேந்திரனிடம் சண்டைக்கு சென்ற மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற்றிருப்பது சிலருக்கு அரசியல் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் இது காங்கிரஸின் முடிவு அல்ல. தமிழக மக்களின் தீர்ப்பு என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக தங்களைப் பற்றி கவலைப்படுவதை விட, காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுவதை பற்றி அதிகம் கவலைப்படுகிறது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் கூறியது என்ன?
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அப்போது நாட்டின் நலன் கருதி ஆளுநர் உரையில் இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் முடிவுகள் வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டால் அது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், மேகதாது அணை கட்ட முயற்சிக்கிறது. அதே காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இடமளித்திருக்கக்கூடாது. இது மக்கள் மீது விஜய்க்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது” சாடியிருந்தார்.
பாஜகவுக்கு அரசியல் வன்மம்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புலம்பல், 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருப்பதை இன்னும் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தார்கள். அந்த மக்கள் ஆணையை மதித்து, முதல்வர் விஜய் விடுத்த அழைப்பின் பேரில் காங்கிரஸ் அமைச்சரவையில் பொறுப்பேற்றது. தமிழ்நாட்டில் காங்கிரஸைப் பொறுத்தவரை, தமிழக நலனே முதன்மை. மேகதாது விவகாரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் , “ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். சுற்றுல்லாதுறை அமைச்சர் ராஜேஷ்குமார், “தேவைப்பட்டால் அமைச்சர் பதவியையே துறக்கத் தயார்” என்று தெரிவித்திருக்கிறார். இதுவே தமிழ்நாடின் காங்கிரஸின் நிலைப்பாடு.
கர்நாடக பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் தொடர்ந்து மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்போது அவரைக் கண்டிக்கத் துணியாதவர்கள், மோடிஜிடம் சென்று தமிழக உரிமைபற்றி பேச திரணியில்லாதவர்கள் தமிழ்நாட்டில் காங்கிரஸை குறிவைப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு இடம் மட்டுமே பெற்றுள்ள பாஜக, தமிழ்நாட்டில் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை விட, காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதைப் பற்றி அதிகம் கவலைப்படுவது அவர்களுடைய அரசியல் வன்மத்தையே வெளிப்படுத்துகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற்றிருப்பது சிலருக்கு அரசியல் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் இது காங்கிரஸின் முடிவு அல்ல; தமிழக மக்களின் தீர்ப்பு. அந்த மக்கள் தீர்ப்பை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசனையும் இந்த விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















