கரூரில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம் - ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைப்பு
பொதுமக்கள், உணவு வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மூலம் கீழ்க்கண்ட உணவு பொருட்கள் பரிசோதனை அறிக்கை அளிக்கப்படவுள்ளது. தரமற்ற பொருளான இருப்பின் நடவடிக்டிகை மேற்கொள்ளப்படும்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையத்தின் மூலம் நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூடம் வாகனத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையத்தின் (FSSAI) மூலம் தமிழகத்திற்கு நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூடம் எனப்படும் Food Safety on Wheels – வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதில் சேலம் மண்டலத்திற்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு ஒரு வாகனம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வாகனம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரிசோதனை முடித்து தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழப்புணர்வு வழங்கும் பொருட்டு கரூர் மாவட்டத்திற்கு இன்றுமுதல் 17.05.2023 முதல் 31.05.2023 வரை விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.
மேற்கண்ட வாகனத்தில் பொதுமக்கள், உணவு வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மூலம் கீழ்க்கண்ட உணவு பொருட்கள் பரிசோதனைக்காக பெறப்பட்டு அவ்விடத்திலேயே பரிசோதனை அறிக்கை அளிக்கப்படவுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் அறிக்கையில் தரமற்ற பொருளாக இருப்பின், உணவு பாதுகாப்புத்துறையின் மூலமாக நடவடிக்டிகை மேற்கொள்ளப்படும். பொதுகமக்கள் தங்களது புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமும் தெரிவிக்கலாம்.
மேலும், இவ்வாகனத்துடன் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களில் முகப்புச்சீட்டில் (Label) உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பிற விபரங்களை பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி – கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு விளக்குவார்கள்.
உணவில் கலப்படம் குறித்து கண்டுப்பிடிக்கும் எளிய பரிசோதனைகளை இவ்வாகனத்துடன் வரும் உணவு பகுப்பாய்வாளர் பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி – கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு செய்து காட்டுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு நியமண அலுவலர் மரு.சிவராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மதுரைவீரன், முனியராஜ், ராமமூர்த்தி, லீயோ மற்றும் பகுப்பாய்வு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.