CM Stalin Letter to Student : சமூக அக்கறையுடன் செயல்பட்ட 7-ஆம் வகுப்பு மாணவி.. கடிதம் எழுதி பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்பாக ஏழாம் வகுப்பு மாணவியான லயஸ்ரீ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அதிக விபத்து ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. சில நேரங்களில் கால்நடைகளின் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. எனவே, இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் இதுபோன்று சாலையில் திரிந்த கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்திருந்தனர்.
இச்சூழலில், சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்பாக ஏழாம் வகுப்பு மாணவியான லயஸ்ரீ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் அதனை தவிர்த்திடும் வகையில் கால்நடைகளுக்கு இரவில் பிரதிபலிக்கும் தோடு அல்லது வில்லைகளை வழங்கிட வேண்டும் என்றும், எனது கோரிக்கை பயனுள்ளதாக இருப்பின் வாழ்த்து மடல் அனுப்பிட வேண்டும் என்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி நா. சல. லயஸ்ரீ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சமூக அக்கறையுடன் ஆலோசனை வழங்கிய மாணவி லயஸ்ரீ-யை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இரவு நேரங்களில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளையும், உயிர்ச்சேதங்களையும் தடுப்பதற்கு கால்நடைகளுக்கு இரவில் ஒளிரும் காதாணி அல்லது வில்லைகளை அணிவிப்பது சிறந்த நடைமுறையாக இருக்கும் என்று தெரிவித்து சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தியதற்காகவும், சிறு வயதிலேயே அவர் மேற்கொண்டுள்ள இச்செயலை பாராட்டியும் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், யுனிசெப் அமைப்பிற்கு கொரோனா நிதி வழங்கியது, அகில இந்திய வானொலியில் 10 நிமிடம் உரையாற்றியது, அகரவரிசைப்படி தமிழ் ஆங்கில பழமொழிகளை தொகுத்து நூல் வெளியிட்டது போன்ற சிறுமி லயஸ்ரீயின் செயல்களை பாராட்டியதோடு, கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்கிட வேண்டும் என்றும், புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.