சிங்கப்பெருமாள் கோயில் பாலம் திறப்பு: சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் இனி இல்லை! மகிழ்ச்சியில் மக்கள்!
Singaperumal Koil Flyover: "சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலத்தில், சென்னை -திருச்சி மார்க்க மேம்பாலத்தினை, இன்று மாலை அமைச்சர் திறந்து வைக்கிறார்"

சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாலம் முழுமையாக பயன்பாட்டிற்கு வருவதால், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. இதன் மூலம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாலம்
தென் மாவட்ட மக்களுக்கு சென்னையிலிருந்து செல்ல வேண்டுமென்றால் முக்கியசாலையாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் ஜி.எஸ்.டி., சாலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாதிப்படைந்த பொதுமக்கள்
செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே கேட் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தினமும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் 30 முறைக்கு மேல் மூடப்படுகிறது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்த இருபதற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனால் பாலம் கட்ட வேண்டும் என தொடர்ந்து அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த 2006 ஆம் ஆண்டு பாடம் கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களுக்காக பாலம் கட்டும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.
மீண்டும் துவங்கிய பணி
இதனைத் தொடர்ந்து சென்னை எல்லைச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பாலம் 740 மீ நீளம், 7.50 மீ அகலத்தில் சுமார் 1308 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ளது. பணிகள் வேகமாக நடைபெற்ற வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாலத்தின் ஒரு பகுதி திறக்கப்பட்டது. அதாவது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஒரகடம் செல்லும் வழி திறக்கப்பட்டதால் ஓரளவிற்கு போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருச்சி -சென்னை இடையிலான பாலத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பணிகள் முடிந்த நிலையில், விரைவாக இந்த பாலத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுந்தது.
திறக்கப்படும் பாலம்
இதனைத் தொடர்ந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக உள்ள பாலம் திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலை 4 மணியளவில், அமைச்சர் அன்பரசன் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
சிறப்பம்சங்கள் என்ன ?
ஏற்கெனவே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மார்க்கம் வழியாக பாலம் திறக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் குறைய தொடங்கியிருக்கிறது. அதேபோல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பாலம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், தென் மாவட்டங்கள் செல்பவர்களுக்கு பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையுள்ளது.
அதேபோன்று ஒரகடத்திலிருந்து வருபவர்களும் தற்போது சுற்றிக்கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை, நேராக அவர்கள் திருச்சி மார்க்கமான சாலையை அடைய முடியும். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





















