முதல் நாளே களத்தில் இறங்கிய கலெக்டர் சினேகா: அதிகாரிகள் அதிர்ச்சி! வளர்ச்சிப் பணிகளில் அதிரடி ஆய்வு!
Sneha IAS: "செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்றுடன் களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருவதால், அதிகாரிகள் சுறுசுறுப்புடன் வேலை பார்த்து வருகின்றனர்"

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மதுராந்தகம் வட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் இறங்கிய கலெக்டர்
செங்கல்பட்டில் முதல் பெண் ஆட்சியராக, சினேகா ஐ.ஏ.எஸ்., பதவியேற்றுள்ளார். பதவியேற்ற அடுத்த நாளே, ஆய்வுக் கூட்டங்களில் ஈடுபட்டு வருவது அதிகாரிகளை சுறுசுறுப்பாக இயங்க வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்றவுடன், பெரும்பாலானூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக, பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த நாள் ஆய்வுப் பணிகளில் களம் இறங்கி இருக்கிறார்.
மதுராந்தகத்தில் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் நியாய விலைக்கடையினை ஆய்வு செய்து அங்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் எடை அளவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சினேகா பரிசோதனை மேற்கொண்டார்.
சுறுசுறுப்பாக ஆய்வு
மாமண்டூரிலுள்ள அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து அங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குழந்தைகளின் எடை அதிகரித்து வருகிறதா என்பது குறித்து அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, பள்ளியாகரத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நர்சரி நாற்றங்காலை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன்பிறகு, பள்ளியாகரத்திலுள்ள ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டார். மேலும், மரக்கன்றுகளுக்கு தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுமாறு அங்குள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
மேலும், , நெல்லி ஊராட்சியில் பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை துரிதப்படுத்தி பயனாளிகளுக்கு விரைவில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மணல், செங்கல், கம்பி, ஆகியவற்றின் தரம் மற்றும் அளவுகளை பரிசோதித்து தரமான முறையில் வீடுகளை கட்டித்தர வேண்டுமென்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
விரைந்து பணியை முடியுங்கள்
வேடவாக்கம் ஊராட்சியில் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் வேடவாக்கம் பேருந்து சாலையினை பார்வையிட்டு சாலையின் தரத்தினை பரிசோதித்தார். ஒப்பந்ததாரர் மற்றும் துறை அலுவலர்களிடம் சாலை பணியினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்குமாறு உத்தரவிட்டார்.
மதுராந்தகம் வட்டம், கிணார் ஊராட்சி கிளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தினை ஆய்வு மேற்கொண்டவர், பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதால் பணிகளை துரிதப்படுத்துமாறும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அழைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை விரைவாக முடித்து தர வேண்டும் என்றும், தவறினால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதிகாரிகள் சுறுசுறுப்பு
அதனை தொடர்ந்து, நல்லாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . மேலும், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்து பணிகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து தருமாறு அறிவுறுத்தினார்.மேலும், ஓணம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை ஆய்வு செய்து அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். மேலும், அடிப்படை வசதிகள் ஏதேனும் தேவையாக இருந்தால் தெரிவிக்குமாறும் கூறினார். மேலும், அவ்வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டிடத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் முதல் நாளே பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு இருப்பதால், மாவட்டத்திற்கு உள்ள பல்வேறு அதிகாரிகளும் தற்போது சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















