Udhayanidhi Neet Speech: டெல்லியில் பிரதமர் வீடு முன் போராடலாம் வாங்க.. நீட் தேர்வை ஒழிக்க அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த உதயநிதி
நீட் தேர்விற்கு எதிராக டெல்லியில் போராட அதிமுக முன்வர வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
நீட் தேர்விற்கு எதிராக டெல்லியில் போராட அதிமுக முன்வர வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் (மதுரை தவிர) நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். போராட்டத்தின் இறுதியில் பேசிய அவர், மத்திய அரசு, பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
நீட் வேண்டாம் - உதயநிதி:
போரட்டத்தின் போது பேசிய உதயநிதி “தமிழ்நாட்டில் நீட் தேர்வால் 21 உயிர்களை இழந்துள்ளோம். மாணவர்களின் கல்வி உரிமைதான் முக்கியம். அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக உள்ளோம். நீட் தேர்வு உயிரிழப்பிற்கு மத்திய அரசும், அதிமுகவும்தான் காரணம்.
ஆளுநரை சாடிய உதயநிதி:
ஆளுநரே 'Who are you? you are Post Man’ என்றும் நீங்கள் ஒரு தபால்காரர். மாநிலத்தின் / முதலமைச்சரின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்க்கும் பணி செய்வதே ஆளுநரின் பணி. அதை நீங்கள் சரியாக செய்யவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான முழு நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிக்காத ஒரே கட்சி பாஜகதான். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மட்டும் அனுப்புவதுதான் ஆளுநரின் பணி. தகுதியற்ற நீட் தேர்வை என்றைக்கு ஒழிக்கிறோமோ அன்றைக்குதான் தமிழ்நாடு மாணவர்களுக்கு விடியல் கிடைக்கும்.
மாணவர்களுக்கு அழைப்பு:
நீட் விலக்குக்கான இன்றைய போராட்டம் ஆரம்பம் மட்டுமே, இது முடிவல்ல. நீட் எதிர்ப்பு போராட்டத்தை அனைத்துக் கல்லூரி மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் போல் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட்டுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம்.
அதிமுகவிற்கு அழைப்பு:
அதிமுகவுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். எடப்பாடி பழனிசாமியிடம் கெஞ்சியும் கேட்டுக்கொள்கிறேன், மத்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, மதுரை மாநாட்டில் ஒரு தீர்மானத்தை போடுங்கள். நீங்கள் கூட வர வேண்டாம். உங்கள் இளைஞர் அணி செயலாளரை அல்லது மாணவர் அணி செயலாளரை அனுப்பி வையுங்கள். நாம் எல்லாம் சேர்ந்து டெல்லி சென்று பிரதமர் வீட்ட்ன் முன் போய் அமர்ந்து போராடுவோம். அதில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைத்தது என்றால் முழு பெருமையையும் நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். அதிமுகவால் தான் 'நீட்' தேர்வு ரத்தானது என்று நான் ஏற்று கொள்கிறேன். நீங்கள் தயாரா?
பாஜகவை விரட்ட வேண்டும்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஓட, ஓட விரட்டி, காங்கிரஸ் ஆட்சியை உட்கார வைத்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்தாகும். ராகுல்காந்தி அந்த வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார். இந்த போராட்டம் இத்துடன் நிற்காது. திமுக தலைவரின் அனுமதியை பெற்று விரைவில் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்” என அமைச்சர் உதயநிதி பேசினார்.